சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு அகஸ்தியர் அருவியில் வரிசையில் நின்று குளிக்க அனுமதி: போக்குவரத்து நெரிசலால் திணறிய பாபநாசம்

திருநெல்வேலி மாவட்டம்,  பாபநாசம் அகஸ்தியர் அருவியில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் நீண்ட வரிசையில் நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.


திருநெல்வேலி மாவட்டம்,  பாபநாசம் அகஸ்தியர் அருவியில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் நீண்ட வரிசையில் நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் பாபநாசத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்  ஏற்பட்டது.
கத்திரி வெயில் தொடங்கி இரண்டாவது நாளான ஞாயிற்றுக் கிழமை பயணிகள் பலரும் நீர்நிலைகளைத் தேடி சென்றனர். அந்த வகையில் பாபநாசம், அகஸ்தியர் அருவியில் ஞாயிற்றுக்கிழமை  காலையிலிருந்தே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வந்திருந்த  சுற்றுலாப் பயணிகள் குவியத் தொடங்கினர்.
பாபநாசம் தாமிரவருணியில் மிகக்குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அனைவரும் அகஸ்தியர் அருவிக்குப் படையெடுத்தனர்.  அங்கும் அதிக அளவில் கூட்டம் கூடியதையடுத்து அருவியின் பின்புறத்தில் விழும் சிறு அருவியிலிருந்து செல்லும் நீரில் குழந்தைகள், குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.  
அதிக அளவில் கூட்டம் இருந்ததையடுத்து பயணிகள் வரிசையில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.  மேலும் அகஸ்தியர் அருவிக்கு வாகனங்கள் வரத்து அதிகரித்ததால் அருவிச் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  இதனால் பாபநாசம் வனச் சோதனைச் சாவடியில் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து வனச்சோதனைச் சாவடியிலிருந்து பாபநாசம் கோயிலைத் தாண்டி வாகனங்கள் வரிசையில் காத்திருந்தன.  
இதனால் வனச்சோதனைச் சாவடி முன்பும், அருவிச் சாலையிலும் கடும் வெயிலில் நெடுநேரம் குழந்தைகள், முதியவர்கள் வாகனங்களில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் பலர் சொரிமுத்து அய்யனார் கோயிலுக்குச் சென்று அங்கு தாமிரவருணி ஆற்றில் குளித்தனர். கடும் வெயிலைத் தாக்குப் பிடிக்க இது போன்ற அருவிகள், நதிகள் உள்ள இடங்களுக்கு அதிக செலவு செய்து குடும்பத்துடன் வருகிறோம்.  ஆனால் இங்கு அதிக அளவில் பயணிகள் கூடுவதால் வனத்துறை சார்பில் உரிய பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகள் எடுக்காமல் உள்ளனர். 
இதனால் மிகுந்த வேதனையோடு செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. உடை மாற்றும் அறை மற்றும் கழிப்பறைகள் மிகவும் சுகாதாரக் கேடான நிலையில் உள்ளன.
பராமரிப்புக் கட்டணம் வசூலிக்கும் வனத்துறை அதற்கான நடவடிக்கைகளை உரிய வகையில் மேற்கொள்ள வேண்டும்' என்று சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
மணிமுத்தாறு அருவி: பாபநாசம் அருவியில் குளித்தப் பலரும் தொடர்ந்து மணிமுத்தாறு அருவியிலும் குளிக்க சென்றனர். மணிமுத்தாறு அருவியில் மிகவும் குறைவாக தண்ணீர் விழுந்தது. ஆனால் பயணிகள் அந்தக் குறைந்த நீரிலும் குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் குளித்து மகிழ்ந்தனர். மேலும் நுழைவுக் கட்டணம் வசூல் செய்யும் வனத்துறை சாலைப் பணிகள் நடைபெறுவது குறித்து உரிய அறிவிப்பு கொடுக்க வில்லை. இதனால் சிறு வாகனங்களில் வருபவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாவதோடு வாகனங்கள் பழுதாகி நிற்கும் நிலை ஏற்படுகிறது.  எனவே சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
விக்கிரமசிங்கபுரம் காவல் ஆய்வாளர் ராஜகுமாரி தலைமையில் போலீஸார், ஊர்க்காவல் படையினர் உள்ளிட்டோர் பாதுகாப்புப் பணியில்
 ஈடுபட்டிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com