முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
ஸ்டாலின் பிரசார வாகனத்தில் சோதனை
By DIN | Published On : 15th May 2019 09:20 AM | Last Updated : 15th May 2019 09:20 AM | அ+அ அ- |

தூத்துக்குடியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிரசார வாகனத்தில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை திடீரென சோதனை மேற்கொண்டனர்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் இரண்டாம்கட்டமாக செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.
இதற்காக, சென்னையில் இருந்து விமானம் மூலம் அவர் செவ்வாய்க்கிழமை காலை தூத்துக்குடி வந்தார்.
இந்நிலையில், ஸ்டாலின் வழக்கமாக தங்கும் தனியார் விடுதிக்கு தேர்தல் பிரிவு அதிகாரிகள் முத்து, செல்வராஜ் ஆகியோர் தலைமையிலான குழுவினர் அதிகாலை 5 மணியளவில் வந்தனர். ஸ்டாலின் தங்கவுள்ள விடுதிக்கு முன்பு நின்றுகொண்டு உள்ளே செல்லும் வாகனங்களையும், விடுதியில் இருந்து வெளியேறும் வாகனங்களிலும் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ளும் வாகனம் தனியார் விடுதியில் இருந்து வெளியே வந்ததால் அந்த வாகனத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தப் பகுதியில் திரண்டிருந்த திமுகவினர் முழக்கங்களை எழுப்பினர்.
சிறிது நேர சோதனைக்குப் பிறகு அந்த வாகனத்தை அதிகாரிகள் விடுவித்தனர்.
ஏறத்தாழ 5 மணி நேரம் சோதனை நடத்தப்பட்ட போதிலும் எந்தவித பணமும், பொருள்களும் பறிமுதல் செய்யப்படவில்லை.
பணம் இருப்பதாக தங்களுக்கு வந்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டதாக தேர்தல் பறக்கும்படை பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, விமான நிலையம் வந்தடைந்த ஸ்டாலின், அங்கிருந்து விடுதிக்கு வராமல் அருகில் உள்ள கிராமங்களுக்குச் சென்று திண்ணைப் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.