ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி
By DIN | Published On : 15th May 2019 09:20 AM | Last Updated : 15th May 2019 09:20 AM | அ+அ அ- |

ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னங்கள் பொருத்தும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் மே 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் அதற்கான ஒப்புகைச் சீட்டு வழங்கும் இயந்திரங்கள் ஆகியன ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் பிரதான கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் உள்ளிட்ட 15 வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணியில் தேர்தல் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தொகுதியில் உள்ள 257 வாக்குச் சாவடிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவின்போது திடீரென பழுதுபடின் அவற்றுக்கான மாற்று இயந்திரங்கள் ஆகியவற்றில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரங்களைப் பொருத்தும் இந்தப் பணி செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெறுகிறது. இப்பணியை தேர்தல் பார்வையாளர் (பொது) சுரேஷ்குமார், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட வருவாய் அலுவலர் மு.வீரப்பன் உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.