ஆறுமுகனேரி அருகே மயங்கி விழுந்த இளைஞர் பலி
By DIN | Published On : 16th May 2019 06:45 AM | Last Updated : 16th May 2019 06:45 AM | அ+அ அ- |

ஆறுமுகனேரி அருகே கொடைவிழாவுக்கு வந்த இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
ஆறுமுகனேரி அருகே உள்ள மூலக்கரை வடக்குத் தெருவைச் சேர்ந்த ராமஜெயம் மகன் சக்திகுமார் (26). சென்னையில் அரிசிக் கடையில் வேலை செய்து வந்தார். திருமணமாகவில்லை. இவர் சொந்த ஊரான மூலக்கரைக்கு, கோயில் கொடைவிழாவுக்காக கடந்த திங்கள்கிழமை வந்திருந்தார். செவ்வாய்க்கிழமை பகல் 11 மணியளவில் வீட்டில் இருந்த அவர், வாந்தி வருவது போன்று உள்ளது என தாயார் தங்கபுஸ்பத்திடம் கூறியுள்ளார்.
இதையடுத்து அவர் அருகே உள்ள கடையில் எலுமிச்சை பழம் வாங்கி வருவதாக கூறி சென்றுள்ளார். பின்னர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது சக்திகுமார் அசைவற்ற நிலையில் மயங்கிக் கிடந்துள்ளார். இதையடுத்து திருச்செந்தூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த ஆறுமுகனேரி போலிலீஸார் சடலத்தை கைப்பற்றி காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.