கோவில்பட்டி அருகே கோயில் கொடை விழாவில் விநோதம்: முள்மெத்தையில் ஏறி நின்று சாமியாடி அருளாசி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியையடுத்த புங்கவர்நத்தம் அருள்மிகு உஜினி மகா காளியம்மன் கோயில்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியையடுத்த புங்கவர்நத்தம் அருள்மிகு உஜினி மகா காளியம்மன் கோயில் கொடை விழாவையொட்டி,  சாமியாடி கருவேலம் முள்மெத்தையில் ஏறி நின்று பக்தர்களுக்கு புதன்கிழமை அருளாசி வழங்கினார். 
புங்கவர்நத்தம் நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன், செல்வ விநாயகர், மாரியம்மன், உஜினி மகா காளியம்மன் கோயில் திருவிழா கடந்த 12ஆம் தேதி தொடங்கியது.  
தொடர்ந்து நாள்தோறும் அம்பாள் மற்றும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. 
13ஆம் தேதி காலை 7 மணிக்கு அளிவேசம் போடும் நேர்த்திக்கடன் நிகழ்ச்சி, 9 மணிக்கு பொங்கலிடுதல், காது குத்துதல், சிறப்பு பூஜை, தீபாராதனை, மாலை 4 மணிக்கு கயர் குத்துதல் நேர்த்திக்கடன் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன.  
செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணிக்கு மேல் பத்திரகாளி அம்மனுக்கு பொங்கல் வைத்தல், தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. 
ஸ்ரீ உஜினி மகா காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி திங்கள்கிழமை இரவு 9 மணிக்கு குடி அழைப்பு, சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. 
செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணிக்கு காளியம்மன் அலங்கார திருச்சப்பரத்தில் எழுந்தருளி, வீதியுலா நடைபெற்றது.  
புதன்கிழமை காலை 9.30 மணிக்கு மேல் உஜினி மகா காளியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு பொங்கலிடுதல் நடைபெற்றது. 
விநோத முறையில் அருளாசி: தொடர்ந்து பிற்பகல் 1 மணிக்கு சிறப்பு பூஜையுடன், கோயில் அருகே குவிக்கப்பட்டிருந்த கருவேலம் முள்மெத்தையில் சாமியாடி ஒருவர் ஏறி, துள்ளி குதித்து படுத்து உருண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜை, உறியடித்தல், மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com