திருச்செந்தூருக்கு பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகரிப்பு

வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு

வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு கடந்த சில நாள்களாக பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.
முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திர திருவிழாவான வைகாசி விசாகத் திருவிழா, வசந்த விழாவாக கடந்த 9 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாள்களில் தினமும் கோயிலில் உச்சிகால தீபாராதனைக்குப் பின்பு சுவாமி ஜெயந்திநாதர் திருக்கோயிலிலிருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் சேர்கிறார். அங்கு மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனையாகி, வசந்த மண்டபத்தை சுவாமி 11 முறை வலம் வரும் வைபவமும் நடைபெறுகிறது.
தொடர்ந்து பத்து நாள்கள் நடைபெறும் வசந்த திருவிழாவின் நிறைவு நாளான மே 18 ஆம் தேதி வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு கோயில்  நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்படுகிறது. காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம் மற்றும் தீபாராதனைக்குப் பின் சுவாமி ஜெயந்திநாதர் திருக்கோயிலிலிருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் சேர்கிறார். விழாவின் முக்கிய நிகழ்வான முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவம் மாலையில் அங்கு நடைபெறுகிறது. பின்னர் வள்ளி, தெய்வானையுடன் சுவாமி ஜெயந்திநாதர் எழுந்தருளி திருக்கோயில் சேர்கிறார்.
பாதயாத்திரை பக்தர்கள்: வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு கடந்த சில நாள்களாகவே திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு அதிகளவிலான பாதயாத்திரை பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் மாலை அணிந்து, வேல் குத்தியும், பால்குடம் காவடி எடுத்தும் பாதயாத்திரையாக வந்து முருகப்பெருமானை வழிபடுகின்றனர். தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பாதயாத்திரை பக்தர்கள் காலை 10 மணி வரைக்கும், மாலை 4 மணிக்கு மேலாகவும் தங்கள் பாதயாத்திரையை தொடங்கி நடந்து வருகின்றனர். இதனால் திருக்கோயிலில் பாதயாத்திரை பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com