தூத்துக்குடியில் திடீர் சாலை மறியல்
By DIN | Published On : 18th May 2019 04:45 AM | Last Updated : 18th May 2019 04:45 AM | அ+அ அ- |

இறந்த கர்ப்பிணியின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்யாமல் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தூத்துக்குடியில் அப்பெண்ணின் உறவினர்களும், இஸ்லாமிய அமைப்பினரும் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டதால் வெகு நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடி முத்தையாபுரம் முஸ்லிம்தெருவைச் சேர்ந்த பீர்முகமது மனைவி சாயிரா பானு (24). கர்ப்பிணியான இவர், வியாழக்கிழமை இரவு வீட்டில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்தாராம். இதையடுத்து, அவரை உறவினர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது, வழியில் சாயிரா பானு உயிரிழந்தார். இதையடுத்து, அவரது சடலத்தை பிரேத பரிசோதனை செய்யாமல் வழங்க வேண்டும் என சாயிரா பானுவின் உறவினர்களும், பல்வேறு இஸ்லாமிய அமைப்பினரும் வலியுறுத்தினர்.
மேலும், இந்த கோரிக்கையை வலியுறுத்தி, பல்வேறு இஸ்லாமிய அமைப்பினரும், உறவினர்களும் வெள்ளிக்கிழமை அரசு மருத்துவமனை முன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுவழியில் திருப்பிவிடப்பட்டன.
மறியலில் ஈடுபட்டவர்களிடம் சட்டப்பேரவை உறுப்பினர் கீதாஜீவன், மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர்கள் பொன்ராமு, வேதரத்தினம் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சமரசம் ஏற்படாததால் மறியலில் ஈடுபட்டவர்கள் அருகில் உள்ள விவிடி சிக்னல் முன் சாலையில் நடுவே அமர்ந்து மறியலை தொடர்ந்தனர்.
இதனால், தூத்துக்குடியில் இருந்து எந்த வாகனங்களும் வெளியே செல்ல முடியாமலும், வெளியே இருந்து வாகனங்கள் உள்ள வரமுடியாமலும் தவித்தன. அப்போது, 108 அவசர சிகிச்சை வாகனம் ஒன்று நோயாளியுடன் வந்தது. அந்த வாகனத்தை மாற்று வழியாக போலீஸார் அரசு மருத்துவமனைக்கு திருப்பிவிட்டனர்.
சாயிரா பானு இறந்தது தொடர்பாக முத்தையாபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பிரேத பரிசோதனை நடத்தாமல் சடலத்தை வழங்குவது தொடர்பாக சார் ஆட்சியர் முடிவு எடுக்க வேண்டும் என்றும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா தனது அலுவலகத்துக்கு அழைத்துப் பேசினார். அப்போதும், சாயிரா பானுவின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்யாமல் வழங்க வேண்டும் என்பதையே இஸ்லாமிய அமைப்பினர் வலியுறுத்தினர்.