வாக்கு எண்ணிக்கைக்கான விதிமுறைகள்: ஆட்சியர் விளக்கம்

மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை

மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு விளக்கம் அளித்தார்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி மற்றும் விளாத்திக்குளம், ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை வஉசி பொறியியல் கல்லூரி மையத்தில் மே 23ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
 கூட்டத்தில் ஆட்சியர் பேசியது:
வாக்கு எண்ணும் பணிகள் காலை 8 மணி முதல் தொடங்க வேண்டும். முதலாவதாக அஞ்சல்  வாக்குகளை எண்ண வேண்டும். வாக்கு எண்ணும் போது ஏதேனும் கட்டுப்பாட்டு கருவியில் பழுது ஏற்பட்டால் அந்த கட்டுப்பாட்டு கருவியை தனியாக வைத்திருக்க வேண்டும். 
 மேலும், பேட்டரியில் சார்ஜ் குறைவாக இருந்தால் உடனடியாக பேட்டரியை மாற்ற வேண்டும். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையும், படிவத்தில் பூர்த்திசெய்யப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கையும் சமமாக இருக்க வேண்டும். இதில் வித்தியாசம் இருந்தால் அந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தனியாக வைத்து இறுதியில் எண்ண வேண்டும்.
 வேட்பாளர்கள் அல்லது வேட்பாளர்களின் முகவர்கள் வாக்காளர் ஒப்புகைசீட்டு இயந்திரத்தில் உள்ள ஒப்புகைச் சீட்டுகளை எண்ண வேண்டும் என்று தெரிவித்தால், சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்தான் ஒப்புகை சீட்டுகளை எண்ணுவது தொடர்பாக இறுதி முடிவு எடுக்க வேண்டும்.
 ஏதேனும் 5 வாக்காளர் ஒப்புகைசீட்டு இயந்திரத்தில் உள்ள ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அந்தப் பணிகளை  இறுதியில் தவறாமல் மேற்கொள்ள வேண்டும். மேலும், வாக்கு எண்ணுவது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் உடனடியாக கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.
 கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மு. வீரப்பன், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் மரகதநாதன் (தேர்தல்), சிந்து (நிலம்), தேர்தல் தனிவட்டாட்சியர் நம்பிராஜன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com