காயல்பட்டினம் மருத்துவமனையில் பிரேத வைப்பறைக்கு குளிரூட்ட வசதி, பணியாளர் நியமிக்க கோரிக்கை
By DIN | Published On : 20th May 2019 07:10 AM | Last Updated : 20th May 2019 07:10 AM | அ+அ அ- |

காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் உள்ள பிரேத வைப்பறைக்கு குளிரூட்டப்பட்ட வசதி மற்றும் சுகாதாரப் பணியாளர் நியமிக்க வேண்டுமென ஆறுமுகனேரி அதிமுக முன்னாள் நகரச் செயலர் இ.அமிர்தராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:
ஆறுமுகனேரி காவல் நிலைய எல்கை பகுதியான ஆறுமுகனேரி, காயல்பட்டினம் மற்றும் மூலக்கரை பகுதிகளில் நிகழும் விபத்துகளால் மரணம் ஏற்படுபவர்களின் உடல் கூறு பரிசோதனை காயல்பட்டினம் அரசினர் மருத்துவமனையில் நடைபெறும். இதற்கென்று அங்கு பிரேத வைப்பறை உள்ளது.
இந்த வைப்பறையில் தற்போது குளிரூட்டும் வசதி இல்லாததால் இங்கு உடல்களை வைத்திருக்க முடியாமல் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வலியுறுத்தப்படுகின்றனர். மறுநாள் உடல் காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு, அங்கு உடல் கூறு பரிசோதனை நடைபெறுகிறது. இதனால் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு வாகனச் செலவு உள்ளிட்ட பொருள் செலவும் அதிகரிக்கிறது. மேலும் இங்கு சுகாதாரப்பணியாளர் இல்லாததால், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், உடன்குடி பகுதியுள்ள அரசு மருத்துவமனையிலிருந்து வர வேண்டியதுள்ளது.
இந்நிலை மாற காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் உள்ள பிரேத வைப்பறைக்கு குளிரூட்டப்பட்ட வசதியும் , சுகாதார பணியாளரையும் உடனடியாக நியமிக்க வேண்டுமென கோரி உள்ளார்.