தனியார் தோட்டத்தில் மருத்துவ கழிவுகள்: அதிகாரிகள் ஆய்வு
By DIN | Published On : 20th May 2019 07:11 AM | Last Updated : 20th May 2019 07:11 AM | அ+அ அ- |

சாத்தான்குளம் அருகே தோட்டத்தில் குவித்துவைக்கப்பட்டிருந்த மருத்துவக் கழிவுகளை சுகாதாரத் துறை அதிகாரிகள் சென்று ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனர்.
சாத்தான்குளம் அருகே உள்ள அரசூர் புதுக்கோட்டையில் உள்ள ஒரு முருங்கை தோட்டத்தில் கேரளத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவக் கழிவுகள் டன் கணக்கில் குவித்து வைக்கப்பட்டுள்ளது என போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள், தட்டார்மடம் காவல் துறையினர் மற்றும் சாத்தான்குளம் வருவாய்த்துறையினர் மருத்துவக் கழிவுகள் குவித்துவைக்கப்பட்டிருந்த இடத்தை ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டனர். அப்போது அங்கிருந்த மருத்துவக் கழிவுகள் திடீரென அப்புறப்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்தது. விசாரணையில் அவை கேரளத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவக் கழிவுகள் அல்ல எனவும், நான்குனேரி அருகில் தனியார் நிறுவனம் சார்பில் 3 மாவட்ட அளவிலான மருத்துவக் கழிவுகள் கொண்டு வரப்பட்டு ஆய்வு நடத்தப்படுகிறது எனவும், அங்கிருந்து மருத்துவக் கழிவுகளை அந்த தோட்டத்து உரிமையாளர், கொண்டு வந்து டன் கணக்கில் சேர்த்து சென்னைக்கு கொண்டு சென்று அதில் பிளாஸ்டிக்கை பிரித்து விற்பனை செய்து வருவது தெரியவந்தது. இதையடுத்து சுகாதாரத் துறையினர் அரசின் உரிமம் பெற்றே இது போன்று பொருள்களை சுகாதாரம் பேணும் வகையில் சேகரித்து வைக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துவிட்டு சென்றனர்.