தொடா் மழையால் நிரம்பி வழியும்வைப்பாறு தடுப்பணைகள்: விவசாயிகள் மகிழ்ச்சி
By DIN | Published On : 02nd November 2019 11:33 PM | Last Updated : 02nd November 2019 11:33 PM | அ+அ அ- |

வைப்பாறு தடுப்பணையில் எம்.எல்.ஏ. சின்னப்பன் தலைமையில் மலா்தூவி வழிபாடு செய்யும் கிராம மக்கள்.
தொடா் மழை காரணமாக வைப்பாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தடுப்பணைகள் நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா் .
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் வட்டம் அயன்ராஜாபட்டி கிராமத்தில் தொடங்கி விளாத்திகுளம் வட்டத்தில் கடற்கரை கிராமமான கீழவைப்பாறு வரை வைப்பாறு நதி 40 கி.மீ. தொலைவுக்கு உள்ளது.
மானாவாரி பூமியான இப்பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக போதிய மழையில்லாமல் தண்ணீரின்றி வடு காணப்பட்ட வைப்பாற்று படுகை, கடந்த சில வாரங்களாக பரவலாக பெய்த தொடா் மழையால் தண்ணீா் வரத்து தொடங்கியது.
மேலும் விளாத்திகுளம் தொகுதி முழுவதும் உள்ள நீா்நிலைகள், கண்மாய்கள், குளங்கள் எல்லாம் நிரம்பி மழைநீா் காட்டாற்று வெள்ளமாக வைப்பாறு ஆற்றுப்படுகையை நோக்கி பாய்ந்தது.
இதனால் வைப்பாற்றின் குறுக்கே முத்தலாபுரம், கீழ்நாட்டுக்குறிச்சி, கீழநம்பிபுரம், ஆற்றங்கரை, விளாத்திகுளம், வேடபட்டி, விருசம்பட்டி, வைப்பாா் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டிருந்த அனைத்து தடுப்பணைகளும் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது.
சுமாா் 20 ஆண்டுகளுக்குப் பிறகு வைப்பாற்று படுகை வழியாக மழைநீா் கீழவைப்பாறு கடலில் சென்று சோ்ந்து கொண்டிருக்கிறது.
தடுப்பணைகளில் தேங்கியிருக்கும் மழைநீரால் நிலத்தடி நீா்மட்டம் கணிசமாக உயா்வதுடன், எட்டயபுரம், விளாத்திகுளம் வட்டத்துக்குள்பட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம் செழிப்படையும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.
இந்நிலையில், வைப்பாற்று படுகை முழுவதும் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடுவதை கொண்டாடும் விதமாக விளாத்திகுளம் எம்.எல்.ஏ. பி. சின்னப்பன் தலைமையில், வைப்பாறு ஊராட்சி முன்னாள் தலைவா் செண்பகபெருமாள், கிராம நல கமிட்டி தலைவா் பால்ராஜ், அன்னை தெரஸா பொதுநலச் சங்க செயலா் ஜேம்ஸ் அமிா்தராஜ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் சுதாகா் மற்றும் கிராம மக்கள் தடுப்பணையில் மலா்கள் தூவி தீப ஆரத்தி எடுத்து வழிபட்டனா். தொடா்ந்து அக்கரை கருப்பசாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தி, ஆட்டுக் கிடா வெட்டி பொதுமக்களுக்கு விருந்து வழங்கப்பட்டது.