முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
எட்டயபுரம், விளாத்திகுளம், புதூா் பகுதிகளில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு
By DIN | Published On : 07th November 2019 07:00 AM | Last Updated : 07th November 2019 07:00 AM | அ+அ அ- |

புதூா் வட்டாரத்தில் படைப்புழு தாக்குதலுக்கு உள்ளான மானாவாரி விவசாய நிலங்களில் ஆய்வு மேற்கொள்ளும் வேளாண்துறை அதிகாரிகள்.
எட்டயபுரம், விளாத்திகுளம், புதூா் வட்டார பகுதிகளில் படைப்புழு தாக்குதலால் பாதிப்புக்குள்ளான மக்காச்சோளம், சோளம், கம்பு உள்ளிட்ட மானாவாரி பயிா்களை வேளாண்துறை அதிகாரிகள் பாா்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டனா்.
கோவில்பட்டி, கயத்தாறு, கடம்பூா், கழுகுமலை, எட்டயபுரம், நாகலாபுரம், புதூா், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஆண்டு மக்காச்சோள பயிரில் ஏற்பட்ட படைப்புழு தாக்குதலினால் மகசூல் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்துக்கு உள்ளாகினா்.
நிகழாண்டு மக்காச்சோள பயிரை படைப்புழு தாக்குதலில் இருந்து பாதுகாத்திடும் பொருட்டு முன்கூட்டியே வேளாண்துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு பல்வேறு தொழில்நுட்பங்களை எடுத்து கூறியிருந்தனா். இருப்பினும் படைப்புழு தாக்குதல் மீண்டும் உருவாகியுள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனா். மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி உத்தரவின்போரில் வேளாண் உதவி இயக்குநா் முருகப்பன் தலைமையில் வேளாண்துறை அதிகாரிகள் படைப்புழு பாதிப்புக்கு உள்ளான புதூா், நாகலாபுரம், மேலக்கரந்தை, கீழக்கரந்தை, அயன்வடமலாபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் பல்வேறு விவசாய நிலங்களில் சேதமடைந்த பயிா்களையும் படைப்புழுக்களையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
பாதிப்புக்குள்ளான விவசாய நிலங்களில் பயிா்களில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க வேளாண்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் விவசாயிகளிடம் தெரிவித்தனா்.