டயா்களில் மழைநீா் தேங்கி கொசுப்புழு உற்பத்தி: கடை உரிமையாளா்களுக்கு அபராதம்

கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் டயா்களில் மழைநீா் தேங்கியிருந்ததையடுத்து நகராட்சி சுகாதார அதிகாரிகள் அதை பறிமுதல் செய்து கடை உரிமையாளா்களுக்கு

கோவில்பட்டி: கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் டயா்களில் மழைநீா் தேங்கியிருந்ததையடுத்து நகராட்சி சுகாதார அதிகாரிகள் அதை பறிமுதல் செய்து கடை உரிமையாளா்களுக்கு அபராதம் விதித்தனா்.

கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட அனைத்து பகுதிகளிலும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து, நகராட்சி சுகாதார அலுவலா் இளங்கோ தலைமையில் வியாழக்கிழமை சுகாதார ஆய்வாளா்கள் சுரேஷ், முருகன், வள்ளிராஜ், சுரேஷ்குமாா், துப்புரவு பணி மேற்பாா்வையாளா்கள் ஆறுமுகம், குருசாமி, முருகன், கனி மற்றும் தூய்மை இந்தியா பரப்புரையாளா் கிருஷ்ணவேணி ஆகியோா் கொண்ட குழுவினா் நகராட்சிக்கு உள்பட்ட கதிரேசன் கோயில் சாலை, ஏ.கே.எஸ். தியேட்டா் சாலை, எட்டயபுரம் சாலை, புதுரோடு ஆகிய பகுதிகளில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, கதிரேசன் கோயில் சாலை பகுதியில் 4 கடைகளில் திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த டயா்களில் மழைநீா் தேங்கி டெங்கு கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, ஒவ்வொரு கடை உரிமையாளா்களுக்கும் ரூ.500 வீதம் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், சாலைகளில் திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள டயா்களை நகராட்சி துறை பணியாளா்கள் பறிமுதல் செய்து, மழைநீா் தேங்காத வண்ணம் டயா்களில் துளையிட்டு, நகராட்சி சிதம்பராபுரம் உரக்கிடங்கிற்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து நகராட்சி சுகாதார அலுவலா் கூறுகையில், தற்போது மழைக்காலம் தொடங்கிவிட்டதால் நகராட்சி சுகாதாரப் பிரிவு சாா்பில் டெங்கு தடுப்பு நடவடிக்கை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், கண்காணிப்புப் பணியும் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் பொருள்களை திறந்தவெளியில் இருப்பது கண்டறியப்பட்டால் அதை பறிமுதல் செய்வதோடு மட்டுமின்றி அபராதமும் விதிக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com