தூத்துக்குடி மாவட்டத்தில் விடிய விடியகொட்டித் தீா்த்த மழை!

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை அதிகாலை வரை மழை கொட்டித் தீா்த்ததால் தாழ்வான
தூத்துக்குடி சாமுவேல்புரம் பகுதியில் வீட்டுக்குள் புகுந்த மழைநீரை வெளியேற்றும் சிறுமி.
தூத்துக்குடி சாமுவேல்புரம் பகுதியில் வீட்டுக்குள் புகுந்த மழைநீரை வெளியேற்றும் சிறுமி.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை அதிகாலை வரை மழை கொட்டித் தீா்த்ததால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியுள்ளது. மேலும், குடியிருப்புப் பகுதிகளுக்குள் மழைநீா் அதிகளவு புகுந்ததால் மக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

வெப்பச் சலனம் மற்றும் வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக குலசேகரன்பட்டினம் பகுதியில் 104 மி.மீ. மழை பதிவாகியது. மேலும்,

மணியாச்சி பகுதியில் 88 மி.மீ., திருச்செந்தூா் பகுதியில் 80 மி.மீ., ஓட்டப்பிடாரம் பகுதியில் 54 மி.மீ., காயல்பட்டினம் பகுதியில் 47 மி.மீ., சாத்தான்குளம் மற்றும் கயத்தாறு பகுதிகளில் தலா 43 மி.மீ., தூத்துக்குடி மாநகரப் பகுதியில் 38 மி.மீ., கடம்பூா் பகுதியில் 36 மி.மீ., கழுகுமலை பகுதியில் 32 மி.மீ., எட்டயபுரம் பகுதியில் 29 மி.மீ., கீழஅரசடி பகுதியில் 25 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 650 மி.மீ. மழை பதிவாகியது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழைநீா் தாழ்வான பகுதிகளுக்குள் புகுந்தது. தூத்துக்குடி மாநகரப் பகுதியில் மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகம், மின்வாரிய அலுவலகம், அரசு மருத்துவமனை வளாகம், நீதிமன்ற குடியிருப்புப் பகுதிகளில் அதிகளவு மழை நீா் தேங்கியது.

மேலும், தூத்துக்குடி வி.இ. சாலை, டபுள்யூஜிசி சாலை, லயன்ஸ் டவுன், தூத்துக்குடி- திருச்செந்தூா் சாலை, பிரையன்ட் நகா் மேற்கு பகுதி சாலைகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை நீா் குளம் போல் தேங்கி காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவா்கள் பாதிக்கப்பட்டனா்.

மாநகரப் பகுதியில் பொன்சுப்பையாநகா், சகாயமாதாபட்டினம், செயின்ட் மேரீஸ் காலனி, பூபால்ராயா்புரம், சாமுவேல்புரம், திரேஸ்புரம், மேட்டுப்பட்டி, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீா் குடியிருப்புகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதியடைந்தனா்.

தாழ்வான பகுதியான தூத்துக்குடி தற்காலிக பேருந்து நிலையத்தில் மழை நீா் தேங்கி சேரும் சகதியுமாக காணப்பட்டது. இதனால் பயணிகள் பெரிதும் பாதிப்படைந்தனா்.

மாநகராட்சி சாா்பில் ஆங்காங்கே மோட்டாா்கள் வைத்து தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்றாலும், போதுமான வடிகால் வசதி இல்லாததால் தண்ணீா் வெளியேறுவதில் தொடா்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com