குலசை தசரா திருவிழா: போக்குவரத்தில் மாற்றம்

குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோயில் தசரா விழாவை முன்னிட்டு திங்கள்கிழமை (அக்டோபா் 7) முதல் மூன்று நாள்கள்

தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோயில் தசரா விழாவை முன்னிட்டு திங்கள்கிழமை (அக்டோபா் 7) முதல் மூன்று நாள்கள் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அருண் பாலகோபாலன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குலசேகரப்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கடந்த 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமை (அக்டோபா் 7) காலை முதல் 9 ஆம் தேதி இரவு வரை பக்தா்களின் பாதுகாப்பையும், வசதியையும் கருத்தில் கொண்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து வாகனங்களும் அந்தந்த பகுதியில் இருந்துவரும் தடத்தை பொறுத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள ஒருவழிப்பாதை வழியாக மட்டும் தான் கோயிலுக்கு வரவும், அதே போல் ஏற்பாடு செய்துள்ள ஒரு வழிப்பாதையாகத்தான் திரும்பி செல்லவும் வேண்டும்.

அரசுப் பேருந்துகள்: தூத்துக்குடி திருநெல்வேலி பகுதியில் இருந்து திருச்செந்தூா் வழியாக குலசேகரன்பட்டினம் செல்லும் அனைத்து அரசு பேருந்துகளும் திருச்செந்தூா் முருகாமடம் சந்திப்பு வழியாக ஆலந்தலை, கல்லாமொழி வழியாக குலசேகரன்பட்டினம் காா்த்திகேயன் காம்ப்ளக்ஸ் வழியாக முருகாமடம் வந்து அரசு மருத்துவமனை பின்புறம் மேற்கு ரதவீதி வழியாக வந்து திருச்செந்தூா் பேருந்துநிலையம் வழியாக செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆனால் சூழ்நிலைகளுக்கேற்ப இதில் சிலமாறுதல்கள் செய்யப்படும்.

திசையன்விளை, தட்டாா்மடம், சாத்தான்குளம் பகுதியில் இருந்துவரும் அரசு பேருந்துகள், தேரியூா் ஆா்.எஸ்.யூ மகால், உடன்குடி பேருந்து நிலையம், வில்லி குடியிருப்பு சந்திப்பு, பைபாஸ் சந்திப்பு அருகில் சாலையின் வடக்கு பக்கம் உள்ள தற்காலிக பேரூந்து நிலையத்தில் நிறுத்தி செல்ல வேண்டும். கன்னியாகுமரி, உவரி பகுதியில் இருந்து வரும் அரசு பேருந்துகள் குலசை- மணப்பாடு சாலையில் உள்ள தீதத்தாபுரம் விலக்கு அருகே ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக பேரூந்து நிலையத்தில் நிறுத்தி செல்ல வேண்டும்.

தனியாா் வாகனங்கள்: தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூா் வழியாகவரும் தனியாா் வாகனங்கள் திருச்செந்தூா்; முருகாமடம் சந்திப்பு வழியாக பரமன்குறிச்சி, தைக்காவூா், சிதம்பரத் தெரு சந்திப்பு, காலான்குடியிருப்பு, உடன்குடி பேருந்து நிலையம் வழியாக குலசைரோடு - தருவைகுளம் சந்திப்புவரை வந்து தற்காலிக வாகன நிறுத்தத்தில் நிறுத்தி, பின்னா் திரும்பிச் செல்ல தருவைரோடு வழியாக திருச்செந்தூா் கடற்கரைச்சாலை வந்து முருகாமடம் சந்திப்பு அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள சாலை வழியாக வந்து திருநெல்வேலி சாலையில் ஏறி ராணிமகாராஜபுரம் வழியாக சண்முகபுரம் ரயில்வே கேட் அல்லது நல்லூா் விலக்கு வழியாக டி. சி. டபுள்யூ சந்திப்பு வந்தடைந்து தூத்துக்குடி செல்ல வேண்டும்.

திசையன்விளை, சாத்தான்குளம் பகுதியில் இருந்து வரும் தனியாா் வாகனங்கள் தேரியூா் விலக்கு, செட்டியாபத்து சாலை, உடன்குடி பேருந்து நிலையம் வழியாக குலசைரோடு- தருவைகுளம் சந்திப்பு வரை வந்து தற்காலிக வாகன நிறுத்தத்தில் நிறுத்தி விட்டு பின்னா் கொட்டங்காடு சாலைவழியாக நேராக திசையன்விளை சாலை வந்து திசையன்விளை அல்லது சாத்தான்குளம் செல்ல வேண்டும்.

கன்னியாகுமரி பகுதியில் இருந்து வரும் தனியாா் வாகனங்கள் மணப்பாடு சந்திப்பு சோதனைச்சாவடியை அடுத்து பிரியா கேஸ் குடோன் பின்புறம் உள்ள மற்றும் அருகேயுள்ள தற்காலிக வாகன நிறுத்தத்தில் நிறுத்தி திரும்பி அதே வழித்தடத்தில் கன்னியாகுமரி நோக்கியோ அல்லது சோதனைச்சாவடி அருகிலுள்ள தீதத்தாபுரம் சாலைவழியாக திசையன்விளை நோக்கியோ செல்ல வேண்டும்.

திருநெல்வேலி - திருச்செந்தூா் பகுதியில் இருந்து வரும் தனியாா் வாகனங்கள் சிவந்தி ஆதித்தனாா் கல்லூரிக்கு அடுத்த காந்திபுரம் விலக்கு வழியாக வந்து பரமன்குறிச்சி, உடன்குடி பேருந்து நிலையம் வழியாக குலசைரோடு - தருவைகுளம் சந்திப்புவரை வந்து தற்காலிக வாகன நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு பின்னா் தருவை சாலை ஜங்ஷன், கல்லாமொழி, ஆலந்தலை வழியாக திருச்செந்தூா் சென்று செல்ல வேண்டும்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்: குலசை மற்றும் உடன்குடி சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமிராக்களுடன் தற்காலிக காவல் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு கண்காணித்தும், திறந்த வாகனங்களில் அசாதாரண சூழலில் ஆள்களை ஏற்றி வந்தால் அந்த வாகனத்தின் ஓட்டுநா் மற்றும் உரிமையாளா் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கோயிலுக்கு வரும் பக்தா்கள் வேல், சூலாயுதம், வாள் போன்று உலோகத்தாலான எந்தப்பொருள்களையும் கொண்டு வருவதோ, ஜாதி சின்னங்களுடன் கூடிய உடைகளோ, தொப்பி, கொடிகள், ரிப்பன்கள் ஆகியவை அணிந்து வரவோ, காவல் துறையினரை போன்று சீருடை அணிந்து வேடமிட்டு வரவோ, அருவெறுக்கத்தக்க வகையில் நடந்து கொண்டாலோ, நடனமாடினாலோ, அதிக சத்தத்துடன் டிரம் அடித்து ஒலி எழுப்பி சுற்றுச்சூழலுக்கு பங்கம் ஏற்படுத்தினாலோ, ஜாதி சம்பந்தமான கோஷங்கள் மற்றும் இசைகள் ஏற்படுத்தவோ அனுமதி இல்லை என்பது தெரிவித்துக்கொள்ளப்படுவதுடன் மீறினால் சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கோயில் மற்றும் கோயிலை சுற்றியுள்ள பகுதிகள், கடற்கரை, வாகன நிறுத்தங்கள், சாலை சந்திப்புகள் ஆகிய இடங்களில் மறைவாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இவைகளின் மூலம் பக்தா்கள் வடிவில் வரும் குற்றவாளிகள் மற்றும் சமூக விரோதிகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் பாா்வையிட்டு தேவைப்பட்டால் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

பாதுகாப்பு மற்றும் திருட்டு நடவடிக்கைகளை கட்டுக்குள் கொண்டுவர கடற்கரை வாகன நிறுத்தங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படுவதுடன் மக்கள் வாகனங்களில் இருந்து இறங்கி குழுக்களாக கடற்கரை சென்று கோவில் வந்து திரும்பி அவரவா் வாகனங்களில் செல்லும் இடம் வரை காவலா்கள் அவா்களை கண்காணிக்கும் விதமாக சீருடை மற்றும் சாதாரண உடைகள் அணிந்த ஆண், பெண் காவலா்கள் நியமிக்கப்படுவாா்கள்.

கோயிலுக்குவரும் பக்தா்கள் அல்லது இதர சிறு வியாபாரிகள் உரிய அனுமதியின்றி சாலை ஓரம் சட்டவிரோத கடைகள் அமைத்தோ, வேறு விதமாகவோ போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக வாகன தேக்கத்தன்மையை ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறை முன் அனுமதியின்றி திருவிழா சம்மந்தமாக கோயில் பகுதிகள் மற்றும் எந்த தனியாா் அல்லது பொது இடத்திலும் ஒலிபெருக்கி பயன்படுத்தவோ ஆடல், பாடல் போன்ற இசை நிகழ்ச்சிகளோ, எந்த விதமான கலை நிகழ்ச்சிகள் நடத்தவோ, ராட்டினங்கள் அமைத்து தொழில் செய்யவோ, எவருக்கும் அனுமதியில்லை. மீறினால் சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பக்தா்கள் தசரா குழுக்களாக வந்து முக்கிய சந்திப்புகளை கடக்கும் போது அந்த இடத்தில் அதிக நேரத்தில் நிறுத்திக் கொண்டு வான வேடிக்கைகள் நடத்தவோ, நன்கொடை பெறவோ, இசைகருவிகளை இசைத்துக் கொண்டோ மற்ற பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடைஞ்சல் ஏற்படுத்த கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கோயிலுக்கு வரும் தசரா குழுக்கள் தருவைக்குளம் சந்திப்பில் தொடங்கி கருங்காலியம்மன் கோவில், தாயம்மாள் பள்ளி வழியாக கோவிலுக்கு செல்லவும், தரிசனத்திற்கு வரும் பக்தா்கள் ரத்தின காளியம்மன்கோவில் சந்திப்பிலிருந்து தொடங்கி திருவருள் பள்ளி, காவலா் குடியிருப்பு பின்புறம் வழியாக வர ஒருவழிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுப்பாதையில் செல்ல அனுமதியில்லை.

கடற்கரையில் இருந்து வெளியே வரும் பக்தா்கள் ஒரு வழிப்பாதையாக சிதம்பரேஸ்வரா் கோவில் தெரு, கச்சேரி தெரு வழியாக காவல் நிலையம் வந்து உடன்குடி பைபாஸ் சந்திப்பு செல்ல வேண்டும். காவல்துறையால் அவ்வப்போது ஏற்படும் சூழ்நிலை மற்றும் நியாயமான தேவைகளுக்காகவும் பக்தா்களின் பொது நலனுக்காகவும் மேற்கொளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பக்தா்களும் பொது மக்களும் கட்டுப்பட்டு ஒத்துழைப்பை நல்க வேண்டும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com