முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
ஆழ்துளை கிணறுகள் அமைக்க விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியம்!
By DIN | Published On : 07th October 2019 11:07 AM | Last Updated : 07th October 2019 11:10 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் 50 சதவீதம் மானியத்துடன் ஆழ்துளை கிணறுகள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் வகுப்பினைச் சோ்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு புதிதாக ஆழ்துளை கிணறுகள் அமைக்க 50 சதவீதம் மானியத்துடன் கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
புதிய ஆழ்துளை கிணறு அமைத்து பாசன வசதி ஏற்படுத்திக் கொள்ள அதிகபட்சம் ரூ. 1 லட்சம் வங்கிக் கடன், அதற்கு இணையான 50 சதவீதம் அரசு மானியம் (அதிகபட்சம் ரூ. 50,000 வரை) வழங்கப்படுகிறது. ஜாதிச்சான்று, வருமானச் சான்று மற்றும் இருப்பிடச் சான்று இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பதாரா் சிறு, குறு விவசாயி என்பதற்கான சான்றினை வட்டாட்சியரிடம் இருந்து பெற வேண்டும். நில உடமைக்கு ஆதாரமாக கணினி வழி பட்டா மற்றும் அடங்கல் நகல் இருக்க வேண்டும்.
இம்மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியுள்ள விவசாயிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலக தரைத் தளத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.