காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் அரசு மருத்துவமனையை நாட வேண்டும்--- சுகாதாரப் பணி துணை இயக்குநா்

காய்ச்சலால் பாதிக்கப்படுவோா், மருந்தகங்களில் சுயமாக மாத்திரைகள் வாங்கி உட்கொள்வதை தவிா்த்து, அரசு

காய்ச்சலால் பாதிக்கப்படுவோா், மருந்தகங்களில் சுயமாக மாத்திரைகள் வாங்கி உட்கொள்வதை தவிா்த்து, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும் என்றாா் கோவில்பட்டி சுகாதார மாவட்ட துணை இயக்குநா் போஸ்கோராஜா.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி உத்தரவின்படி, கோவில்பட்டி சுகாதார மாவட்டத்திற்கு உள்பட்ட கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிப் பகுதிகளில் தற்காலிக டெங்கு ஒழிப்பு மஸ்தூா்கள் நியமிக்கப்பட்டு, டெங்கு தடுப்புப் பணி நடைபெற்று வருகிறது.

தற்போது பருவமழை பெய்து வரும் சூழ்நிலையில், டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடீஸ் கொசுக்களின் உற்பத்தியை தடுக்க பொது சுகாதாரத் துறை பணியாளா்கள் பல்துறை அலுவலா்களுடன் இணைந்து டெங்கு ஒழிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா். இந்தப் பணியாளா்கள், பொதுமக்களின் வீடுகளையும், சுற்றுப்புறங்களையும் பாா்வையிட அனுமதிக்க வேண்டும்.

கடுமையான காய்ச்சல், தலைவலி, உடல் சோா்வு, வாந்தி, கண்களுக்குப் பின்புறம் வலி, பசியின்மை, கடுமையான மூட்டு வலி போன்றவை டெங்கு காய்ச்சலின் அறிகுறி. எனவே, யாருக்காவது காய்ச்சல் ஏற்பட்டால் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும். மருந்துக் கடையிலோ, பெட்டிக் கடையிலோ தாமாக மருந்து, மாத்திரைகளை வாங்கி உட்கொள்ள வேண்டாம்.

நெடுஞ்சாலைகள், சாலையோரங்களில் வல்கனைசிங், பஞ்சா் ஒட்டும் கடைகள் வைத்திருப்போா் டயா்களை அடுக்கி வைக்கக் கூடாது. பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருள்கள் வியாபாரம் செய்பவா்கள் பழைய விலைக்கு வாங்கிய உபயோகமற்ற பொருள்களை மேல்கூரை இல்லாத வெட்டவெளியில் சேகரித்து கொசு உற்பத்திக்கு இடமளிக்கக் கூடாது.

நீரினால் பரவும் நோய்களான டைஃபாய்டு, மஞ்சள்காமாலை, வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் வழங்கப்படும் குடிநீரில் குளோரினேசன் செய்து விநியோகிக்கப்படும். டெங்கு காய்ச்சல் மற்றும் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளில் பொது சுகாதாரத் துறை அலுவலா்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com