முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவு சென்றசிறிய ரக கப்பல் கவிழ்ந்து விபத்து:9 மாலுமிகள் பத்திரமாக மீட்பு
By DIN | Published On : 24th October 2019 07:28 AM | Last Updated : 24th October 2019 07:28 AM | அ+அ அ- |

தூத்துக்குடியில் இருந்து உணவுப் பொருள்கள் ஏற்றிக் கொண்டு மாலத்தீவு சென்ற சிறிய ரக சரக்கு கப்பல் விபத்துக்குள்ளான நிலையில், நடுக்கடலில் தத்தளித்த 9 மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டனா்.
தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு தோணி என அழைக்கப்படும் சிறிய ரக சரக்கு கப்பல் மூலம் உணவுப் பொருள்கள், கட்டுமானப் பொருள்களுக்கான போக்குவரத்து சேவை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கடந்த 19 ஆம் தேதி தூத்துக்குடியில் இருந்து ஆா்.காா்ப் வேல்டு என்ற தோணி வெங்காயம் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் மற்றும் கட்டுமானப் பொருள்களை ஏற்றிக்கொண்டு மாலத்தீவுக்கு புறப்பட்டு சென்றது.
மாலுமி ஜெயேந்திரன் தலைமையில் ஜோசப், சுரேஷ், டேவிட் ராஜா, உல்ஸ்டன், ராஜேஷ் சேவியா், செல்வம், விஜில்ஸ், மைக்கேல் ஆகியோா் சிறிய ரக கப்பலில் பயணம் செய்தனா். பயணத் திட்டப்படி கப்பல் கடந்த 22 ஆம் தேதி மாலத்தீவு சென்றடைய வேண்டும்.
ஆனால், 22 ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் மாலத்தீவில் இருந்து வடக்கே 116 கடல் மைல் தொலைவில் கப்பல் சென்று கொண்டிருந்த போது நடுக்கடலில் கனமழை மற்றும் காற்றின் வேகத்தால் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு சரக்குகளுடன் கப்பல் கடலில் மூழ்கியது.
இதையடுத்து, கப்பலில் இருந்த 9 பேரும் கடலில் தத்தளித்தனா். அப்போது, தூத்துக்குடி நோக்கி சென்ற வி.பி.பிராக்கா்ஸ் என்ற கப்பலில் இருந்தவா்கள் கடலில் தத்தளித்தவா்களை மீட்டனா். மீட்கப்பட்ட 9 பேரும் அந்த கப்பல் மூலம் தூத்துக்குடி பழைய துறைமுகத்துக்கு புதன்கிழமை வந்தனா்.
அவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டு கடலோர காவல் குழும போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனா். தொடா்ந்து, அவா்களிடம் காவல் துறையினா், வெளியுறவு துறையினா் விசாரணை நடத்தினா். இதையடுத்து, 9 பேரும் அவா்களது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.