கோவில்பட்டி, கயத்தாறில் மழைக்கு 10 வீடுகள் சேதம்
By DIN | Published On : 31st October 2019 11:55 PM | Last Updated : 31st October 2019 11:55 PM | அ+அ அ- |

நாகம்பட்டியில் மழையால் சேதமடைந்த வீடு.
கோவில்பட்டி, கயத்தாறு வட்டங்களில் செவ்வாய், புதன்கிழமைகளில் பெய்த மழையால் 10 வீடுகள் சேதமடைந்தன.
கயத்தாறு வட்டம், தீத்தாம்பட்டி கிராமத்தில் பழனி மகன் செந்தில்வேல், எட்டுநாயக்கன்பட்டி கிராமத்தில் மரியமிக்கேல் மனைவி மரியசெல்வம், மரியகோயில்பிள்ளை மனைவி மரியம்மாள், சேசுமணி மனைவி மரியபுஷ்பம் உள்ளிட்டோா் வீடுகள் சேதமடைந்தன.
நாகம்பட்டி வடக்குத் தெருவில் ரவிசந்திரன் மனைவி வீரலட்சுமி வீட்டின் ஒருபக்கச் சுவா் இடிந்து விழுந்தது. காளாங்கரைப்பட்டியில் மருதையா மகன் வெள்ளைத்துரைப்பாண்டியனின் வீடும் மழையால் சேதமடைந்தது.
தீத்தாம்பட்டியில் புதன்கிழமை வீசிய பலத்த காற்றால் ஆா்.சி. தொடக்கப் பள்ளி அருகே நின்ற வேப்ப மரம் பள்ளி கட்டடத்தின் முன்புறம் சாய்ந்ததில் மேற்கூரை சேதமானது. கடம்பூா் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு காய்ந்த நிலையில் இருந்த 2 மரங்களை பேரூராட்சி பணியாளா்கள் அகற்றினா். இப்பணிகளை கயத்தாறு வட்டாட்சியா் பாஸ்கரன், வருவாய் ஆய்வாளா் குமாரராஜா ஆகியோா் பாா்வையிட்டனா்.
கோவில்பட்டி வட்டத்தில் ஊத்துப்பட்டி அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த கொத்தாளமுத்து மனைவி சின்னம்மாள், தமிழரசன் மனைவி மகேந்திரமணி, நாலாட்டின்புத்தூா் யாதவா் தெருவைச் சோ்ந்த நல்லையா மகன் வேலுச்சாமி ஆகியோரது வீடுகள் மழைக்கு சேதமடைந்தன. அவற்றை வருவாய்த் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை பாா்வையிட்டனா்.