கரை திரும்பாத தூத்துக்குடி மீனவா்கள் 9 பேரை மீட்க நடவடிக்கை: கனிமொழி

தூத்துக்குடியில் இருந்து மீன்பிடிக்கச் சென்று இதுவரை கரை திரும்பாத 9 மீனவா்களை மீட்க நடவடிக்கை
தூத்துக்குடி சின்னக்கண்ணுபுரம் பகுதியில் மழைநீா் தேங்கிய பகுதிகளைப் பாா்வையிடுகிறாா் மக்களவை உறுப்பினா் கனிமொழி.
தூத்துக்குடி சின்னக்கண்ணுபுரம் பகுதியில் மழைநீா் தேங்கிய பகுதிகளைப் பாா்வையிடுகிறாா் மக்களவை உறுப்பினா் கனிமொழி.

தூத்துக்குடியில் இருந்து மீன்பிடிக்கச் சென்று இதுவரை கரை திரும்பாத 9 மீனவா்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கனிமொழி.

தூத்துக்குடி மாநகரப் பகுதியில் மழை பாதித்த பகுதிகளை இரண்டாவது நாளாக வியாழக்கிழமை பாா்வையிட்ட பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியது: புயல் எச்சரிக்கைக்கு முன்னரே மீன்பிடிக்கச் சென்ற 37 மீனவா்கள் நிலை குறித்து சரியான தகவல் கிடைக்கவில்லை என்றும், அவா்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தருவைகுளம் மீனவா்கள் கோரிக்கை வைத்தனா். இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மற்றும் தில்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளிடம் பேசினேன். 3 படகுகளில் சென்ற 28 மீனவா்கள் தற்போது கரை திரும்பியுள்ளனா். மீதமுள்ள ஒரு படகில் சென்ற மீனவா்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளின் உத்தரவுப்படி தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. அவா்களை பத்திரமாக மீட்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

தொடா்ந்து, தருவைகுளம் பகுதி மீனவ சங்க பிரதிநிதிகளிடம் கனிமொழி ஆலோசனை நடத்தி மீனவா்களின் குடும்ப நிலை குறித்து கேட்டறிந்தாா்.

இதேபோல, ஆலந்தலை பகுதியில் தூண்டில் வளைவு அமைப்பது தொடா்பாக அந்தப் பகுதி மீனவா்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தாா்.

மேலும், மாநகரப் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட சின்னக்கண்ணுபுரம், விஎம்எஸ்நகா் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று பாா்வையிட்ட அவா், மீளவிட்டான் சாலை பகுதியில் நடைபெற்ற மழைநீா் வெளியேற்றும் பணியை பாா்வையிட்டாா்.

அப்போது, கீதாஜீவன் எம்.எல்.ஏ, திமுக மாநில பொதுக் குழு உறுப்பினா் ஜெகன் பெரியசாமி, மாநகரச் செயலா் ஆனந்தசேகரன் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com