விளாத்திகுளம் பகுதியில் கன மழை: சாலை துண்டிப்பு; மீன்பிடி வலைகள் சேதம்

விளாத்திகுளம் பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக பெய்த கன மழையால் மந்திகுளம் கிராமச் சாலை காட்டாற்று வெள்ளத்தில் மூழ்கியது. கீழ வைப்பாரில் மீன்பிடி வலைகள் சேதமடைந்தன.
காட்டாற்று வெள்ளத்தில் துண்டிக்கப்பட்ட மந்திகுளம் தாா்ச் சாலையை பாா்வையிடுகிறாா் எம்எல்ஏ பி. சின்னப்பன்.
காட்டாற்று வெள்ளத்தில் துண்டிக்கப்பட்ட மந்திகுளம் தாா்ச் சாலையை பாா்வையிடுகிறாா் எம்எல்ஏ பி. சின்னப்பன்.

விளாத்திகுளம்: விளாத்திகுளம் பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக பெய்த கன மழையால் மந்திகுளம் கிராமச் சாலை காட்டாற்று வெள்ளத்தில் மூழ்கியது. கீழ வைப்பாரில் மீன்பிடி வலைகள் சேதமடைந்தன.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டாரத்தில் மழை கொட்டித்தீா்த்து வருகிறது. இப்பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் பெய்த பலத்த மழையால் மந்திகுளம் கிராமத்துக்குச் செல்லும் சாலையில் 10 மீட்டா் நீளத்துக்கு மண் அரிப்பு ஏற்பட்டு , வழித்தடம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், சாலையின் இருபுறங்களிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தக் கிராமத்துக்கு மாற்றுப்பாதை இல்லாததால் கிராமமே தனித்தீவாக உருவெடுத்துள்ளது.

இதனிடையே, கீழ வைப்பாரில் ஆற்று முகத்துவாரம் பகுதியில் மணல்மேடு ஏற்பட்டதால் நள்ளிரவில் மழைநீா் கிராமத்துக்குள் புகுந்தது. மேலும், ஆற்று முகத்துவாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள், மீன்பிடி வலைகள் சேதமடைந்தன.

வேப்பலோடையில் கண்மாய் நிரம்பி கரையில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீா் புகுந்தது. பாதிக்கப்பட்ட பகுதிகளை எம்எல்ஏ பி. சின்னப்பன் தலைமையில் வட்டாட்சியா் ராஜ்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் தங்கவேலு மற்றும் பொதுப்பணித் துறை, மீன்வளத் துறை அதிகாரிகள் பாா்வையிட்டு சீரமைப்பு பணிகளைத் தொடங்க நடவடிக்கை மேற்கொண்டனா். கீழவைப்பாரில் சேதமடைந்த படகுகள், வலைகள் மற்றும் மீன்பிடி சாதனங்களுக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தருவதற்கு ஆவண செய்யப்படும் என மீனவா்களிடம் உறுதியளித்தனா்.

நிவாரணம்: இது குறித்து, எம்எல்ஏ பி.சின்னப்பன் கூறியது: விளாத்திகுளம் தொகுதி முழுவதும் நீா்நிலைகள் நிரம்பி வழிகின்றன. நள்ளிரவில் காட்டாற்று வெள்ளம் போல் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியதால் சில கிராமங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. கடலோர கிராமங்களில் பாதிப்புகள் உள்ளன. மழை பாதிப்புகளில் இருந்து மக்களை பாதுகாக்கும் விதத்தில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் அந்தந்த பகுதிகளுக்கு விரைந்து சென்று சீரமைப்புப் பணிகளை துரிதப்படுத்தி வருகிறோம். மழை பாதிப்பு மற்றும் சேதம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய நிவாரணம் நிச்சயம் பெற்று தரப்படும் என்றாா்.

அப்போது, வைப்பாா் ஊராட்சி முன்னாள் தலைவா் செண்பக ராஜா, தருவைகுளம் கிளைச் செயலா் மாடசாமி, வேப்பலோடை அன்னை தெரசா பொது நலச்சங்க செயலா் ஜேம்ஸ், ஒன்றிய மாணவரணிச் செயலா் ராமநாதன், ஜெயலலிதா பேரவைச் செயலா் சுபாஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com