Enable Javscript for better performance
இடைத்தேர்தல் முடிவுகள் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னோட்டம்: கே.எஸ்.அழகிரி- Dinamani

சுடச்சுட

  

  இடைத்தேர்தல் முடிவுகள் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னோட்டம்: கே.எஸ்.அழகிரி

  By DIN  |   Published on : 23rd September 2019 10:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நான்குனேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கும் என்றார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.
  நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி: மகாத்மா காந்தியின் 150ஆவது ஆண்டு பிறந்த நாளைப் போற்றும் வகையில், கன்னியாகுமரியில் அக்டோபர் 2ஆம் தேதி தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில் பாதயாத்திரை நடத்த இருக்கிறோம். இந்தப் பாதயாத்திரைக்கு புதுவை முதல்வர் நாராயணசாமி தலைமை வகிக்கிறார். இதேபோல் சென்னையில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் 150 அடி உயரத்தில் கொடிக் கம்பம் அமைக்கப்படும்.
  நான்குனேரி தொகுதியை மதச்சார்பற்ற கூட்டணியில் உள்ள கட்சிகள் காங்கிரஸுக்கு விட்டுக் கொடுத்துள்ளன. அதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான்குனேரி தொகுதி தேசிய இயக்கத்தின்ஆணிவேர். அத்தொகுதியில் வெற்றி பெறுவோம்.
  அதிமுக, பாஜக அரசுகளின் தவறுகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி, ஒரு சிறந்த அரசு, சிறந்த முதல்வர் வேண்டும் என்று மக்களுக்கு உணர்த்தி  பிரசாரம் மேற்கொள்வோம்.  மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் 39 தொகுதிகளில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்றது. அதேபோல இந்த இடைத்தேர்தலிலும் வெற்றி பெறுவோம். இந்த இடைத்தேர்தல் முடிவுகள் நடைபெறவுள்ள உள்ளாட்சி மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும்.
  கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத பொருளாதாரச் சரிவை நாடு தற்போது சந்தித்துள்ளது. பெருநிறுவனங்களுக்கு 10 சதவீத வரிச் சலுகை அளித்துள்ளதால் மக்களுக்கு பயன் கிடைக்கப் போவதில்லை. பாஜக அரசின் பொருளாதாரக் கொள்கை இந்தியாவுக்கு ஏற்றதல்ல.
  காங்கிரஸ் தலைவர்கள் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சுக்கு எங்கள் கட்சியின் திருச்சி வேலுச்சாமி பதில் சொல்லியிருக்கிறார், அதுதான் எனது கருத்தும்.
  விருப்பப்பட்டு படித்தால் யார் வேண்டுமானாலும் ஹிந்தி படிக்கலாம். ஆனால், மொழியைத் திணிக்கக் கூடாது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வுகள் நடைபெறும்போது அந்தந்த மாநிலத்தில் மாநில மொழியில் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் கொள்கை என்றார் அவர்.
  பேட்டியின்போது, காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலர் சஞ்சய் தத்,  ஹெச்.வசந்தகுமார் எம்.பி., எம்எல்ஏக்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், தாரகை கத்பட், மகிளா காங்கிரஸ் மாவட்டத் தலைவி அருள் சபிதா ரெக்ஸ்லின் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
  வைகோவுடன் கருத்து வேறுபாடு இல்லை: முன்னதாக, தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கே.எஸ்.அழகிரி கூறியது: 
  தமிழக எம்.பி.க்கள் 5 ஆண்டுகளில் செய்ய வேண்டியதை ஒரே மாதத்தில் செய்துள்ளனர். தமிழக அரசு செயலிழந்துவிட்டது. மத்திய அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய நிதி ஆதாரங்களைக்கூட தமிழக அரசால் பெற முடியவில்லை.
  தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை சரியில்லை. இரு மாதங்களில் 19 கொலைகள் நடந்துள்ளன. மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளன?
  நான்குனேரி இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு ராகுல் காந்தியை அழைப்போம். மதிமுக பொதுச் செயலர் வைகோவுடன் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. அவரை தேர்தல் பிரசாரத்துக்கு அழைப்போம் என்றார் அவர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai