முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இதுவரை 3.11 லட்சம் பேருக்கு சிகிச்சை: ஆட்சியர் தகவல்

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 11 ஆயிரம்

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 11 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர் என்றார் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி.
இதுகுறித்து திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி: முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்ட அரசு மருத்துவமனைகள், குறிப்பிட்ட சில தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 17 மருத்துவமனைகள் இணைக்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நிகழாண்டில் இதுவரை இந்தத் திட்டத்தில் 5,830 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இதன்மூலம் ரூ. 6.23 கோடி மதிப்பில் காப்பீட்டு நிதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் இதுவரை 83,337 பேர் காப்பீட்டுத் திட்டத்தில் ரூ. 141 கோடி மதிப்புக்கு சிகிச்சை பெற்றுள்ளனர்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிகழாண்டில் இதுவரை 3,290 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் 852 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். மாவட்டம் முழுவதும் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் 3 லட்சத்து 11 ஆயிரத்து 614 பேர் பயனாளர்களாக உள்ளனர்.
தூத்துக்குடி புதிய பேருந்து நிலைய மைதானத்தில் அக்டோபர் 5-ஆம் தேதி புத்தகத் திருவிழா தொடங்கி 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 100 பதிப்பாளர்கள் அரங்குகளை அமைக்க உள்ளனர். எழுத்தாளர்கள், சாகித்ய அகாதெமி விருது பெற்றவர்கள் பல்வேறு தலைப்புகளில் பேச உள்ளனர். மக்கள் புத்தக திருவிழாவில் பங்கேற்று புத்தகங்களை வாங்கிச் செல்ல வேண்டும் என்றார் அவர்.
தொடர்ந்து, மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயனடைந்த 11 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் நினைவுப் பரிசுகளை வழங்கி உடல் நலம் விசாரித்தார். மேலும், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை மூலம் நடைபெற்ற தொற்றா நோய்கள் மருத்துவ முகாமை தொடக்கிவைத்து பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை இணை இயக்குநர் பரிதா செரின், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பொறுப்பு முதன்மையர் பாவலன், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட மாவட்ட அலுவலர் க. சுந்தரமூர்த்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தா. பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நலத்திட்ட உதவிகள் அளிப்பு: தொடர்ந்து நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தின்போது பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்ற ஆட்சியர், தமிழ்நாடு மாநில நோயாளர் நல நிதியிலிருந்து கீழ திருச்செந்தூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்பையாவின் குடும்பத்தாரிடம் ரூ.25,000-க்கான காசோலையையும்,  கோவில்பட்டியில் தொடக்கப் பள்ளி சத்துணவு அமைப்பாளராகப் பணியாற்றி பணியிடையில் காலமான ஜெகதாம்பாளின் மகள் ரஹ்மத்பீவிக்கு கருணை அடிப்படையில் சமத்துவபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளருக்கான பணி நியமன ஆணையையும், முதல்வரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு தலா ரூ.2.10 லட்சம் மதிப்பில் வீடு கட்டுவதற்கான உத்தரவுகளையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் சங்கரநாராயணன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com