விவசாய நிலங்களில் அமைக்கப்படும் மின் கோபுரங்களுக்கு மாத வாடகை வழங்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாய விளை நிலங்களில் அமைக்கப்படும் மின் கோபுரங்களுக்கு மாத வாடகை

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாய விளை நிலங்களில் அமைக்கப்படும் மின் கோபுரங்களுக்கு மாத வாடகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
 தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தின் போது ஆட்சியர் சந்தீப் நந்தூரி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். அப்போது, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொருளாளர் கே.பி. பெருமாள் தலைமையில் ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு:   தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாய விளை நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள மின் கோபுரங்களுக்கு மாத வாடகை வழங்க வேண்டும், இதுவரை அமைக்கப்பட்ட மின்கோபுரங்களுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும்,   விவசாய விளை நிலங்களில் மேலும் உயர் மின் கோபுரம் அமைக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிவாயு குழாய் சேமிப்பு கிடங்குக்கு எதிர்ப்பு: தூத்துக்குடி அருகேயுள்ள பொட்டல்காடு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்:  மாவட்டத்தில் குலையன்கரிசல், கூட்டாம்புளி, அத்திமரப்பட்டி, பொட்டல்காடு உள்ளிட்ட பகுதிகளில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் எரிவாயு குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பொட்டல்காடு கிராமத்தில் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியில்  எரிவாயு குழாய்  மற்றும் சேமிப்புக் கிடங்கு அமைக்கும் பணிக்கான ஆழ்துளை கிணறு தோண்டும் பணி தற்போது நடைபெற்ற வருகிறது.
பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியில் எரிவாயு அமைப்பது மற்றும் சேமிப்புக் கிடங்கு அமைப்பதால் பெரும் விபத்து ஏற்படும். எனவே, தங்கள் பகுதியில் சேமிப்பு கிடங்கு அமைக்கக் கூடாது ,   மீறி அமைத்தால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மனு: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தூத்துக்குடி மத்திய மாவட்ட பொறுப்பாளர் சேகர் தலைமையில் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு:  திருச்செந்தூர் வட்டத்தில் கானம் குளம்,  அம்மமன்புரம், பெரியகுளம், நந்தை குளம், நாலயிரமுடையார் குளம் போன்றவற்றில் மணல் அள்ளப்பட்டு தினந்தோறும் நூறு லாரிகளில் உடன்குடி அனல் மின்நிலைய பணிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அரசுக்கு வருவாய் இழப்பீடு செய்யப்படும் இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு விவசாயிகள் பெயரில் போலியாக வழங்கப்பட்டு வரும் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு: கல்வி உரிமை கூட்டு இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு:   தேசிய கல்விக் கொள்கை என்பது குழந்தைகளின் அடிப்படை உரிமையான கல்வி உரிமையை பறிக்கும். நவீன தீண்டாமைக்கும், குலவழிக்கல்விக்கும் வழிவகுத்து, சமூகத்தில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும். எனவே, இந்த கல்விக் கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும். மாநில அரசு இந்தக் கொள்கையை முற்றிலும் நிராகரிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com