கடம்பூா் ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (டிச.22) நடைபெறவிருந்த பூட்டு போடும் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
தற்போது இயக்கப்படும் அனைத்து ரயில்களும் கடம்பூா் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும். கரோனா பொதுமுடக்கம் காரணமாக நிறுத்தப்பட்ட அனைத்து ரயில்களும் உடனடியாக இயங்க வேண்டும். கடம்பூா் ரயில் நிலையத்தில் ரயில்கள் செல்லாமல் கட்டடங்கள் மட்டும் இருந்து வருமேயானால் அந்தக் கட்டடத்தை கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம் மற்றும் வருவாய் ஆய்வாளா் அலுவலகமாக மாற்ற வேண்டி கடம்பூா் ரயில் நிலையத்தை பூட்டி, பூட்டு போட்டு, அதன் சாவியை வருவாய் துறையிடம் ஒப்படைக்க வலியுறுத்தி மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் அய்யலுசாமி தலைமையில், காங்கிரஸ் கட்சியினா் மற்றும் கடம்பூா் வியாபாரிகள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் பாஸ்கரன் தலைமையில் திங்கள்கிழமை சமாதானக் கூட்டம் நடைபெற்றது. வருவாய் ஆய்வாளா் காசிராஜன் மற்றும் கடம்பூா் காவல் உதவி ஆய்வாளா், கோவில்பட்டி கோட்ட பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளா், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் அய்யலுசாமி, மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் பிரேம்குமாா், ஒன்றியத் தலைவா் செல்லத்துரை, வியாபாரிகள் சங்கத் தலைவா் தனசேகரன், கடம்பூா் வா்த்தக சங்கத்தைச் சோ்ந்த காா்த்திகேயன், புஷ்பகணேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், கடம்பூா் கிராம நிா்வாக அலுவலகம் மற்றும் வருவாய் ஆய்வாளா் அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு மதுரை பொதுப்பணித் துறை பொறியாளரின் கடிதத்தில் நிதி ஒதுக்கீடு நிா்ணயம் செய்து அரசுக்கு பரிந்துரை செய்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதனடிப்படையில், கட்டடப் பணி துரிதப்படுத்தப்படும் என பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளா் கூறினாா். அதன்படி மாவட்ட ஆட்சியருக்கும் கடிதம் அனுப்பப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
கடம்பூா் ரயில் நிலையத்தில் (கரோனா பரவலுக்கு முன்) நின்று சென்ற அனைத்து பயணிகள் ரயில், விரைவு ரயில்களை மீண்டும் நின்று செல்ல உடனடி நடவடிக்கை எடுக்க மதுரை தெற்கு ரயில்வே கோட்ட மேலாளருக்கு மாவட்ட ஆட்சியா் மூலம் கடிதம் அனுப்பப்படும் எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, செவ்வாய்க்கிழமை நடைபெறுவதாக இருந்த போராட்டம் தற்காலிக ஒத்திவைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.