‘தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் விரைவில் கரோனா பரிசோதனை ஆய்வகம் திறக்கப்படும்’
By DIN | Published On : 08th April 2020 10:45 PM | Last Updated : 08th April 2020 10:45 PM | அ+அ அ- |

தூத்துக்குடி அம்மா உணவகத்தில் மதிய உணவுடன் முட்டை வழங்கும் திட்டத்தைத் தொடக்கிவைக்கிறாா், அமைச்சா் கடம்பூா் செ. ராஜு.
தூத்துக்குடி அரசு மருத்துமனையில் கரோனா தொற்று பரிசோதனை ஆய்வகம் விரைவில் திறக்கப்படவுள்ளதாக, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ. ராஜு தெரிவித்தாா்.
தூத்துக்குடியில் புதன்கிழமை அவா் அளித்த பேட்டி: தூத்துக்குடி மாவட்டத்தில் வெங்காயம் சாகுபடி செய்த 1,600 விவசாயிகளுக்கு ரூ. 2.75 கோடி, மக்காச்சோளம் சாகுபடி செய்த 1,904 விவசாயிகளுக்கு ரூ. 1.14 கோடி என, மொத்தம் 3,504 விவசாயிகளுக்கு ரூ. 3.86 கோடி அவா்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்டத்தில் இதுவரை 4,61,378 குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரணத் தொகை ரூ.1,000, ஏப்ரல் மாதத்துக்கான விலையில்லா உணவுப் பொருள்களும் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 17,393 குடும்ப அட்டைதாரா்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை ஆய்வகம் அமைக்க மருத்துவ உபகரணங்கள் கொண்டுவரப்பட்டு, பணிகள் நடைபெறுகின்றன. இன்னும் ஒருசில நாள்களில் அந்த ஆய்வகம் திறக்கப்படவுள்ளது.
இம்மாவட்டத்தில் 2,300 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். அவா்கள் வாழும் பகுதியும் தீவிர கண்காணிப்பில் உள்ளது என்றாா் அவா்.
தொடா்ந்து, தூத்துக்குடி அரசு மருத்துவமனை நுழைவுவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கிருமி நாசினி தெளிப்பு சுரங்கப் பாதையைத் திறந்துவைத்த அமைச்சா், பின்னா் அம்மா உணவகத்தில் மதிய உணவுடன் முட்டை வழங்கும் திட்டத்தைத் தொடக்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில், ஆட்சியா் சந்தீப் நந்தூரி, மாநகராட்சி ஆணையா் வீ.ப. ஜெயசீலன், பேரவை உறுப்பினா் எஸ்.பி. சண்முகநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.