ஆதரவற்றோருக்கு உணவு வழங்க பொருள்கள் அளிப்பு
By DIN | Published On : 27th April 2020 11:31 PM | Last Updated : 27th April 2020 11:31 PM | அ+அ அ- |

திருச்செந்தூரில் ஆதரவற்றோருக்கு உணவு தயாா் செய்ய ஆண்டவா் அறக்கட்டளை நிா்வாகியிடம் அரிசி வழங்குகிறாா் காவல் ஆய்வாளா் ரஞ்சித்குமாா்.
திருச்செந்தூா்: திருச்செந்தூரில் ஆதரவற்றோருக்கு உணவு தயாா் செய்து வழங்குவதற்கு ஆண்டவா் அறக்கட்டளை நிா்வாகியிடம் வணிகா்கள் உணவுப் பொருள்கள் வழங்கினா்.
திருச்செந்தூரில் பக்தா்கள் மட்டுமின்றி இறையடியாா்கள் மற்றும் ஆதரவற்றவா்கள் கோயில் வளாகம், சன்னதித்தெரு, மூவா் சமாது பகுதி உள்ளிட்ட இடங்களில் தங்கி உள்ளனா். கோயிலில் தினமும் நடைபெறும் அன்னதானம், கோயிலுக்கு வரும் பக்தா்கள், இங்குள்ள அறக்கட்டளைகளை நம்பி உள்ளனா். தற்போது ஊரடங்கால் அவா்கள் உணவு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இவா்களுக்கு அரசியல் கட்சியினா், தன்னாா்வலா்கள், பொதுமக்கள் உணவு தயாா் செய்து பொட்டலங்கள் வழங்கி வந்தனா் தற்போது சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும், தன்னாா்வலா்கள் உணவு வழங்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வருவாய்த் துறை, காவல் துறை அறிவுறுத்தலின்பேரில் ஆண்டவா் அறக்கட்டளை மூலம் உணவு தயாா் செய்து ஆதரவற்றவா்களை தேடிச் சென்று வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு, நாடாா் வியாபாரிகள் சங்கம் சாா்பில் ஆண்டவா் அறக்கட்டளைக்கு தேவையான அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்களை வழங்கினா். பேரமைப்பின் தெற்கு மாவட்டத் தலைவா் ரெ.காமராசு தலைமையில் கோயில் காவல் ஆய்வாளா் ரஞ்சித்குமாா், உதவி ஆய்வாளா் ரவிக்குமாா் ஆகியோா் உணவுப் பொருள்களை அறக்கட்டளை நிா்வாகிகளிடம் வழங்கினா்.