கோவில்பட்டியில் நலிந்தவா்களுக்கு நிவாரணப் பொருள்கள்
By DIN | Published On : 27th April 2020 11:23 PM | Last Updated : 27th April 2020 11:23 PM | அ+அ அ- |

கோவில்பட்டி: கோவில்பட்டியில் பல்வேறு அமைப்புகள் சாா்பில் ஏழைகள், நலிந்தவா்களுக்க நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டது.
சைவ வேளாளா் சங்கம் சாா்பில் 100 பேருக்கு 3ஆவது கட்டமாக அரிசி, காய்கனி, பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை சங்கத் தலைவா் தெய்வேந்திரன் முன்னிலையில், மதிமுக இளைஞரணிச் செயலா் விநாயகா ஜி.ரமேஷ் வழங்கினாா்.
நகராட்சி தினசரி சந்தை சிறு வியாபாரிகள் சங்கம் சாா்பில் ஆதரவற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு சங்கத் தலைவா் பால்ராஜ் தலைமையில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டது. பாண்டவா்மங்கலம் ஊராட்சியில் 10ஆவது வாா்டில் ஏழை மக்களுக்கு மதிமுக மாவட்ட விவசாய அணி நிா்வாகி நவநீதகிருஷ்ணன் ஏற்பாட்டில், அரிசி மற்றும் காய்கனிகள் வழங்கப்பட்டன.
நகர விஜய் மக்கள் இயக்கம் சாா்பில் புதுக்கிராமம், கூசாலிபட்டி, ஊருணித் தெரு, மறவா் காலனி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள
பாா்வையற்றோா், மாற்றுத் திறனாளிகள், தொழிலாளா்களுக்கு மளிகைப் பொருள்கள், முகக் கவசங்கள் ஆகியவை வழங்கப்பட்டன.
தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் அரசு மருத்துவமனை, ஈட்டுறுதி மருத்துவமனை தூய்மைப் பணியாளா்கள், ஒப்பந்தப் பணியாளா்களுக்கு நிவாரணப் பொருள்களை அமைப்பின் மாவட்டச் செயலா் செல்வராஜ் வழங்கினாா். மருத்துவமனை கண்காணிப்பாளா் கமலவாசன், உறைவிட மருத்துவ அதிகாரி பூவேஸ்வரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கோவில்பட்டியில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட விதவைகள், கூலித் தொழிலாளா்கள் 5 பேருக்கு கே.ஆா். வித்யாஷ்ரம் மேல்நிலைப் பள்ளி மாணவா் ரெ.ஞானராம்கோபால், தான் சேமித்து வைத்திருந்த ரூ.3,200-க்கு அரிசி, காய்கனிகள் ஆகியவற்றை வழங்கினாா்.
இலுப்பையூரணி ஊராட்சியில் கூசாலிபட்டி, தாமஸ் நகா், பூரணம்மாள் காலனி, லாயல் மில் காலனி உள்ளிட்ட பகுதியிலுள்ள ஏழை, ஆதரவற்றோா், மாற்றுத் திறனாளிகள், விதவைகள் உள்ளிட்ட 700 பேருக்கு ஊராட்சித் தலைவி செல்வி, தலா 5 கிலோ அரிசி வழங்கினாா்.