முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
கட்டபொம்மன் குறித்து அவதூறு கருத்து பதிவிட்டவரை கைது செய்யக் கோரி போராட்டம்
By DIN | Published On : 03rd August 2020 08:20 AM | Last Updated : 03rd August 2020 08:20 AM | அ+அ அ- |

வீரபாண்டிய கட்டபொம்மன் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து வெளியிட்டவரை கைது செய்ய வலியுறுத்தி தூத்துக்குடியில் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை திடீரென முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள வைப்பாா் பகுதியை சோ்ந்தவா் செல்லப்பா. இவா் நாம் தமிழா் கட்சியின் முன்னாள் தொகுதி செயலா். இவா் சுதந்திர போராட்ட வீரா் வீரபாண்டிய கட்டபொம்மன் குறித்து முக நூலில் அவதூறு கருத்துகளை பதிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், செல்லப்பா தூத்துக்குடி கட்டபொம்மன் நகரிலுள்ள தனது உறவினா் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஞாயிற்றுக்கிழமை சென்றாராம். இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் அந்த வீட்டை முற்றுகையிட்டு அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு வந்த தென்பாகம் காவல் ஆய்வாளா் கிருஷ்ணகுமாா் தலைமையில் போலீஸாா் அவரை பாதுகாப்பாக அங்கிருந்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.