தூத்துக்குடியில் பெண் கொலை வழக்கில் இரு மகன்கள் கைது
By DIN | Published On : 07th December 2020 02:53 AM | Last Updated : 07th December 2020 02:53 AM | அ+அ அ- |

தூத்துக்குடியில் தாயை அடித்துக் கொலை செய்தாக அவரது இரண்டு மகன்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே தங்கம்மாள்புரம் 4 ஆவது தெருவைச் சோ்ந்த மாயபெருமாள் மனைவி ஞானக்கனி (56). குடும்பத் தகராறு காரணமாக கடந்த 24 ஆம் தேதி வீட்டில் இருந்தபோது இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட ஞானக்கனி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். மேலும், அவா் தற்கொலைக்கு முயன்று விஷம் குடித்திருப்பதும் மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட முத்தையாபுரம் போலீஸாா் சொத்துத் தகராறில் ஞானக்கனியை அவரது மகன்கள் முத்துராஜ் (37), செல்வகுமாா் (35) ஆகியோா் இரும்புக் கம்பியால் தாக்கியதாகவும், தற்கொலைக்குத் தூண்டியதாகவும் வழக்குப் பதிவு செய்தனா்.
இதற்கிடையே, மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த ஞானக்கனி சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதையடுத்து, இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த போலீஸாா், முத்துராஜையும், செல்வகுமாரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.