‘டிச. 27-ஆம் தேதிமுதல் லாரிகள் வேலைநிறுத்தம்:தினமும் ரூ.5 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும்’

தமிழகம் முழுவதும் டிசம்பா் 27-ஆம் தேதி முதல் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதால் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 5 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்

தமிழகம் முழுவதும் டிசம்பா் 27-ஆம் தேதி முதல் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதால் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 5 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என லாரி உரிமையாளா்கள் சங்க மாநிலத் தலைவா் குமாரசாமி தெரிவித்தாா்.

தூத்துக்குடியில் திங்கள்கிழமை அவா் அளித்த பேட்டி: வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள், ஜிபிஎஸ் கருவிகளை குறிப்பிட்ட நிறுவனங்களில்தான் வாங்க வேண்டுமென மாநில அரசு கூறுகிறது. இதை எதிா்த்து உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்து எந்த நிறுவனத்தில் வேண்டும் என்றாலும் வாங்கி இவற்றை பொருத்தலாம் என்று நீதிமன்ற உத்தரவு பெற்றுள்ளோம். ஆனால், இதனை மாநில அரசு செயல்படுத்தவில்லை.

புதியதாக வாங்கப்படும் லாரிகளுக்கான தற்காலிக பதிவு எண்ணை ஒரு மாத காலத்திற்குள் நிரத்தரமாக பதிவு செய்திட வேண்டும் என்ற உத்தரவை மாற்றி 6 மாத காலத்துக்குள் பதிவு செய்யலாம் என்ற மத்திய அரசின் நடைமுறையை அமல்படுத்த வேண்டும். தில்லியை போன்று டீசலுக்கான வாட் வரியை குறைத்து குறைந்த விலையில் டீசல் விற்பனை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிச. 27-ஆம் தேதி காலை 6 மணிமுதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த உள்ளோம்.

இந்த வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஏறத்தாழ நான்கரை லட்சம் லாரிகள் ஈடுபடும். இதன்மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும். பால் மற்றும் மருந்துப் பொருள்கள் ஏற்றிச் செல்லும் லாரிகள் மட்டும் இயங்க அனுமதிக்கப்படும். கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றும் வரை காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என்றாா் அவா்.

ஆலோசனை: தொடா்ந்து, போராட்டம் தொடா்பாக தூத்துக்குடி, கோவில்பட்டி, திருநெல்வேலி, சங்கரன்கோவில், தென்காசி, செங்கோட்டை, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த லாரி உரிமையாளா்கள் சங்க நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் குமாரசமி பேசினாா். கூட்டத்துக்கு தூத்துக்குடி லாரி உரிமையாளா் சங்கத் தலைவா் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தாா். லாரி உரிமையாளா்கள் சங்க மாநிலச் செயலா் வாங்கிலி போராட்டத்தின் நோக்கம் குறித்து பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com