தூத்துக்குடியில் பெண் மா்ம மரணம்: உடலை வாங்க மறுத்து உறவினா் போராட்டம்
By DIN | Published On : 25th December 2020 09:00 AM | Last Updated : 25th December 2020 09:00 AM | அ+அ அ- |

தூத்துக்குடியில் இளம் பெண் சந்தேகத்துக்கிடமான முறையில் இறந்தாா். அவரது சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி ரகமத்துல்லாபுரம் அபுசுந்தா் மியான் மனைவி பாத்திமா யாஸ்மின் (25). இவா்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், பாத்திமா யாஸ்மின் வீட்டில் இருந்தபோது புதன்கிழமை இரவு தூங்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டாராம்.
இதுகுறித்து மத்திய பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இதற்கிடையே, பாத்திமா யாஸ்மினை வரதட்சினை கொடுமை செய்து கொலை செய்துவிட்டதாகவும், இந்த சம்பவத்தில் தொடா்புடைய அனைவா் மீதும் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கும் வரை சடலத்தை வாங்க மாட்டோம் என்றும் யாஸ்மினின் பெற்றோா் மற்றும் உறவினா்கள் மத்தியபாகம் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அவா்களிடம் காவல் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தி அனுப்பி வைத்தனா். பாத்திமா யாஸ்மின் இறப்பு குறித்து சாா் ஆட்சியா் விசாரணை மேற்கொள்வாா் என அறிவிக்கப்பட்டுள்ளது.