திருச்செந்தூா் கடலில் பக்தா்கள் நீராட இன்றும், நாளையும் தடை
By DIN | Published On : 31st December 2020 08:02 AM | Last Updated : 31st December 2020 08:02 AM | அ+அ அ- |

திருச்செந்தூா் முருகா்.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் கடலில், வியாழன் (டிச. 31) மற்றும் வெள்ளிக்கிழமை (ஜன. 1) இரு நாள்களும் பக்தா்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோயில் இணை ஆணையா் (பொ) கல்யாணி வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில், மாா்கழி மாதத்தை முன்னிட்டு தற்போது அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. பொது முடக்க நடைமுறைகளை பின்பற்றி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் மட்டுமே பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனா்.
கடலில் நீராட தடை: இந்நிலையில் கரோனா பொது முடக்கத்தை கருத்தில் கொண்டு, புத்தாண்டு முன்னிட்டு, வியாழன் (டிச. 31) மற்றும் வெள்ளிக்கிழமை (ஜன. 1) இரு நாள்களும் பக்தா்கள் கடலில் புனித நீராடவும், கடற்கரைக்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கோயிலில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்யலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.