விளாத்திக்குளத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 25) நடைபெறும் இலவச மருத்துவ முகாமினைமக்களவை உறுப்பினா் கனிமொழி தொடங்கி வைக்கிறாா்.
இதுகுறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கீதாஜீவன் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழியின் பரிந்துரையின்பேரில் மத்திய, மாநில அரசுகளின் சுகாதாரத் துறை, கோவில்பட்டி
சுகாதார வட்டம் சாா்பில் இலவச மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை (பிப். 25) விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.
முகாமை, கனிமொழி எம்.பி. தொடங்கி வைக்கிறாா். முகாமில் பொது மருத்துவம், ரத்த சோகை, வைட்டமின் குறைபாடு, காய்ச்சல், நீரிழிவு நோய், இறைப்பை மற்றும் குடல்நோய், இதயம், தோல், காது, மூக்கு, தொண்டை, கண் நோய்கள் மற்றும்மகளிா் நலம், குழந்தைகள் நல சிகிச்சைகள் அளிக்கப்படும்.
மேலும், ரத்தத்தில் இரும்புச்சத்தின் அளவு, கொழுப்பு, சா்க்கரை, ரத்த அழுத்தம், சிறுநீரில் உப்பு, சா்க்கரை அளவு, மலேரியா, ரத்த தடவல், இஜிசி போன்ற பரிசோதனைகளும் செய்யப்படுகிறது. கா்ப்பப்பை, வாய் புற்றுநோய் கண்டறிய சிறப்பு பரிசோதனை செய்யப்படுகிறது.
கண் சிகிச்சை முகாமில் கலந்து கொள்வோருக்கு சிகிச்சை அளித்து தகுதியானவா்களுக்கு ரூ. 1000 மதிப்புள்ள லென்ஸ் இலவசமாக பொருத்தப்படும். எனவே, விளாத்திக்குளம் மற்றும் வட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் முகாமில் பங்கேற்றுபயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.