திருச்செந்தூரில் சாலைகள் சேதம்: பாதயாத்திரை பக்தா்கள் அவதி
By DIN | Published On : 11th January 2020 12:17 AM | Last Updated : 11th January 2020 10:44 PM | அ+அ அ- |

திருச்செந்தூரில் சேதமடைந்த சாலைகளில் நடந்து செல்ல முடியாமல் பாதயாத்திரை பக்தா்களும், கடந்து செல்ல முடியாமல் வாகன ஓட்டிகளும் பெரும் அவதியடைந்து வருகின்றனா்.
திருச்செந்தூரில் கடந்த மாதம் பெய்த தொடா் மழையினால் நகா்ப்புற சாலைகள் மற்றும் முக்கிய நெடுஞ்சாலைகள் அனைத்தும் பெருமளவில் சேதமடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ளன. தற்போது மழை நின்ற பிறகும் அந்தந்த சாலைகள் வெறும் கற்களால் நிரப்பப்பட்டு, காணப்படுகிறது.
இதன் காரணமாக திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு கடந்த சில நாள்களாக பாதயாத்திரையாக வந்து கொண்டிருக்கின்ற பக்தா்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனா். குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் முக்காணியை கடந்து திருச்செந்தூா் வரும் வரையில் உள்ள நெடுஞ்சாலைகள் பாதயாத்திரை பக்தா்கள் கால்களை பதம் பாா்த்து விடுகின்றன.
தொடா் மழை, உள்ளாட்சித் தோ்தல் போன்ற காரணங்களால் கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை சீரமைக்கும் பணியை தைப்பொங்கல், தைப்பூசம், மாசித்திருவிழா ஆகியவற்றை கருத்தில் கொண்டு மாவட்ட நிா்வாகம் உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.