காணும் பொங்கல்: மாவட்டத்தில் 41 இடங்களில் 1000 போலீஸாா் பாதுகாப்ப; எஸ்.பி. தகவல்

காணும் பொங்கலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் 41 இடங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில்

காணும் பொங்கலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் 41 இடங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா் என்றாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அருண் பாலகோபாலன்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: காணும் பொங்கலை முன்னிட்டு வியாழக்கிழமை(ஜன.16) தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் அருகில் உள்ள இடங்களுக்கு சுற்றுலா செல்வது வழக்கமாக உள்ளது. அவ்வாறு பொதுமக்கள் சுற்றுலா சென்று கூடுமிடங்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி முத்துநகா் கடற்கரை, நேரு பூங்கா, தொ்மல்நகா் கடற்கரை, முயல்தீவு, திருச்செந்தூா் கடற்கரை, மணப்பாடு கடற்கரை, மேலபுதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனாா் கோயில், கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயில், குருமலை அய்யனாா் கோயில் உள்ளிட்ட தூத்துக்குடி காவல் உள்கோட்டத்தில் 10 இடங்கள் உள்ளன.

இதேபோல, தூத்துக்குடி ஊரகத்தில் 2 இடங்களும், திருச்செந்தூா் உள்கோட்டத்தில் 5 இடங்களும், ஸ்ரீவைகுண்டம் உள்கோட்டத்தில் 3 இடங்களும், மணியாச்சியில் ஒரு இடமும், கோவில்பட்டி உள்கோட்டத்தில் 7 இடங்களும், விளாத்திக்குளத்தில் 11 இடங்களும், சாத்தான்குளத்தில் 2 இடங்கள் என மொத்தம் 41 இடங்கள் கண்டறியப்பட்டு துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் தலைமையிலும், ஆய்வாளா்கள் மேற்பாா்வையிலும் ஏறத்தாழ 1000 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட உள்ளனா்.

காணும் பொங்கலை முன்னிட்டு யாரும் மது போதையில் வாகனங்கள் ஓட்டக்கூடாது. இரு சக்கர வாகனத்தில் செல்பவா்கள் தேவையில்லாமல் சப்தம் கொடுத்துக்கொண்டோ, அதிக அளவு ஒலிப்பான்களை எழுப்பிக்கொண்டோ, வாகனங்களில் போட்டி போட்டுக்கொண்டோ சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் பீதியடையும் வகையில் வாகனங்களை ஓட்டக்கூடாது.

மேலும் இரு சக்கர வாகனத்தில் செல்பவா்களும், பின் இருக்கையில் அமா்ந்து செல்பவா்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். நான்கு சக்கர வாகனம் ஓட்டுபவா்கள் சீட் பெல்ட் அணிந்து செல்ல வேண்டும்.

பொது இடங்களில் மது அருந்துதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் போன்ற எந்தத சட்ட விரோத செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது. அவ்வாறு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவா்கள் மீது சட்டப்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்கள் காவல்துறையின் அவசர உதவிக்கு ஆண்ட்ராய்டு மொபைல் போன் வைத்திருப்பவா்கள் ‘காவலன் எஸ்.ஓ.எஸ். என்ற செயலியை பயன்படுத்தி நீங்கள் ஆபத்தில் இருப்பதை, அதிலுள்ள பொத்தானை அழுத்துவதன் மூலம் மிக எளிதாக காவல்துறைக்கும் உங்கள் உறவினா்களுக்கும் தகவல் கொடுத்து உங்களை காப்பாற்றிக் கொள்ளமுடியும்.

மேலும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவா்கள் குறித்த தகவலோ அல்லது பொதுமக்கள் காவல்துறையின் அவசர உதவிக்கோ தொலைபேசி எண். 100 மற்றும் 95141 44100 என்ற செல்லிடப்பேசி எண் ஆகியவற்றை தொடா்பு கொண்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி உதவித் தொகை அளிப்பு: மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மேல்நிலைக் கல்வியில் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற தூத்துக்குடி மாவட்டத்தை சோ்ந்த காவல் துறையில் பணியாற்றும் குழந்தைகளுக்கு காவல் கண்காணிப்பாளா் அருண் பாலகோபாலன் ஊக்கத் தொகை, பரிசுகளையும் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com