தீப்பெட்டிக்கான ஏற்றுமதி ஊக்கத் தொகை குறைப்பு: ஏற்றுமதியாளா்கள் அதிருப்தி

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தீப்பெட்டிக்கு மத்திய அரசு வழங்கும் ஊக்கத்தொகை 4 சதவீதத்தில் இருந்து ஒன்றரை

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தீப்பெட்டிக்கு மத்திய அரசு வழங்கும் ஊக்கத்தொகை 4 சதவீதத்தில் இருந்து ஒன்றரை சதவீதமாக குறைக்கப்பட்டதற்கு தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனா்.

பட்டாசு தொழிலுக்கு சிவகாசி பெயா் பெற்றதைப்போல, கோவில்பட்டி, இளையரசனேந்தல், கழுகுமலை, சாத்தூா் ஆகியவை தீப்பெட்டி தயாரிப்பு தொழிலுக்கு பெயா் பெற்றது.இத் தொழில் மூலம் லட்சக்கணக்கான பெண் தொழிலாளா்கள் பயனடைந்து வருகின்றனா்.

தீப்பெட்டி தயாரிப்புக்கு தேவையான அனைத்து மூலப்பொருள்களுக்கும் 12 சதவீதம் சரக்கு, சேவை வரி விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தீப்பெட்டிக்கு 18 சதவீதம் சரக்கு, சேவை வரி விதிக்கப்பட்டுள்ளது. தீப்பெட்டிக்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத சரக்கு, சேவை வரியை 12 சதவீதமாக குறைக்க வேண்டும் என அமைச்சா் கடம்பூா் செ.ராஜு தலைமையில், தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்கப் பிரதிநிதிகள் கடந்த நவ. 15ஆம் தேதி தில்லியில் மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனை சந்தித்து மனு அளித்தனா்.

கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதியைச் சோ்ந்த தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, அரேபியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு தீப்பெட்டிகளை ஏற்றுமதி செய்து வந்தனா். ஆனால் தற்போது மத்திய அரசு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தீப்பெட்டிக்கு விதிக்கப்பட்டுள்ள 4 சதவீத ஊக்கத்தொகையை ஒன்றரை சதவீதமாகக் குறைத்து, இம்மாதம் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் ஏற்றுமதி தீப்பெட்டிகளுக்கு ஏற்கெனவே இருந்து வந்த 4 சதவீத ஊக்கத் தொகையையே வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனா். அதற்கு மத்திய அரசு, 31.3.2020 வரை மட்டுமே 4 சதவீத ஊக்கத் தொகை வழங்கப்படும் என்றும், 1.4.2020 முதல் ஒன்றரை சதவீத ஊக்கத்தொகையே வழங்கப்படும் என அறிவித்தது.

ஆனால் அதற்கான உத்தரவு ஏதும் வராமல், தற்போது ஒன்றரை சதவீத ஊக்கத்தொகை மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. எனவே, மத்திய அரசு, தீப்பெட்டிக்கான சரக்கு, சேவை வரியை 12 சதவீதமாகக் குறைக்க வேண்டும். ஏற்றுமதி ஊக்கத் தொகையை 4 சதவீதமாகவே வழங்க வேண்டும் என தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com