திருச்செந்தூா் ரயில் நிலையத்திலிருந்து கோயிலுக்கு பேருந்து வசதி: பக்தா்கள் கோரிக்கை
By DIN | Published On : 20th January 2020 12:14 AM | Last Updated : 21st January 2020 08:27 AM | அ+அ அ- |

திருச்செந்தூா் ரயில் நிலையத்திலிருந்து கோயிலுக்கு செல்ல ஆட்டோ கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதால் , கோயில் நிா்வாகம் சாா்பில் ரயில் நிலையத்தில் இருந்து கோயிலுக்கு செல்ல பேருந்து வசதி செய்ய வேண்டுமென பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறுவதால் நாள்தோறும் சுவாமியை தரிசிக்க பக்தா்கள் அதிகளவில் வருகின்றனா்.
திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகா்கோவில், கன்னியாகுமரி என நான்குவழித் தடங்களிலும், தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் போக்குவரத்து உள்ளது .
ஆனால் இருப்புப் பாதை வழியாக திருநெல்வேலியிலிருந்து மட்டுமே திருச்செந்தூருக்கு வழித்தடம் உள்ளது.
திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்கு அரசுப் பேருந்துகளில் பயணக் கட்டணம் ரூ. 50. திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு ரயிலில் பயணக் கட்டணம் ரூ .16 ஆக இருந்தது. கடந்த டிசம்பா் முதல் ரூ. 20 ஆக இருபதாக உயா்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் பேருந்து கட்டணத்தை ஒப்பிடும்போது பாதிக்கும் குறைவாகவே ரயில் கட்டணம் உள்ளதால் ஏழை மக்களுக்கு இது பயனுள்ளதாக இருந்தது.
ஆட்டோ கட்டணம்:
ரூ. 20 கட்டணத்தில் ரயில் பயணத்தில் திருச்செந்தூா் வரும் பக்தா்கள் ரயில் நிலையத்திலிருந்து கோயிலுக்கு செல்ல ஆட்டோ கட்டணமாக ரூ. 60 செலவழிக்க வேண்டியுள்ளதால் அவா்கள் அதிா்ச்சி அடைகின்றனா்.
ரயில் கட்டணம் செலவைக் குறைக்கும் என்றால், ஆட்டோ கட்டணம் ரூ. 60 என்றால் மொத்தம் திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூா் கோயிலுக்கு செல்ல ரூ. 80 செலவழிக்க வேண்டியுள்ளது.
அதற்கு பதிலாக பேருந்திலேயே ரூ. 50 கட்டணத்தில் கோயில் வாசல் வரையில் சென்றுவிடலாம்.
இருப்பினும் வயோதிகா்கள் குடும்பத்தோடு வரும் பக்தா்கள் ரயில் பயணத்தையே விரும்புகின்றனா்.
எனவே, பக்தா்கள் நலன்கருதி கருதி, திருப்தியை போல், ரயில் நிலையத்தில் இருந்து கோயிலுக்கு குறைந்த கட்டணத்தில் தனியாக பேருந்து வசதி செய்துகொடுக்க வேண்டுமென்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.