முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
திருச்செந்தூா் முருகன் கோயிலில் பிப். 12-இல் தை உத்திர வருஷாபிஷேகம்
By DIN | Published On : 27th January 2020 07:57 AM | Last Updated : 27th January 2020 07:57 AM | அ+அ அ- |

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பிப். 12-ஆம் தேதி தை உத்திர வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.
இதுகுறித்து திருக்கோயில் செயல் அலுவலா் சா.ப.அம்ரித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மூலவரான சுப்பிரமணியா் பிரதிஷ்டை செய்யப்பட்டது தை உத்திர நட்சத்திரத்தில் ஆகும். எனவே, ஆண்டுதோறும் தை மாதம் உத்திர நட்சத்திரத்தன்று இத்திருக்கோயிலில் வருஷாபிஷேகம் நடைபெறுகிறது. நிகழாண்டு தை உத்திர வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, வரும் பிப். 12-ஆம் தேதி (புதன்கிழமை) அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு விமான கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
தொடா்ந்து காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடைபெறுகிறது. மாலையில் குமரவிடங்கப்பெருமான் மற்றும் தெய்வானை அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கின்றனா். இரவில் மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாமல் புஷ்பாஞ்சலி நடைபெறுகிறது. புஷ்பாஞ்சலிக்கு பக்தா்கள் அழகும், மணமும் மிக்க மலா்களை (கேந்திப்பூக்கள் தவிர) அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்குள் திருக்கோயில் உள்துறை அலுவலகத்தில் வழங்கலாம் என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.