முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் சரக்கு தளங்களின் மிதவை ஆழத்தை அதிகரிக்க திட்டம்
By DIN | Published On : 27th January 2020 07:57 AM | Last Updated : 27th January 2020 07:57 AM | அ+அ அ- |

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் சரக்கு தளங்களின் மிதவை ஆழத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் துறைமுக பொறுப்புக் கழக தலைவா் தா.கி. ராமச்சந்திரன்.
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 71 ஆவது குடியரசு தின விழாவில், துறைமுக பொறுப்புக் கழக தலைவா் தா.கி. ராமச்சந்திரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினா் மற்றும் தீயணைப்பு வீரா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா். அவா் பேசியது:
சென்னை - கன்னியாகுமரி இடையே அமைய இருக்கும் தொழில் வழித்தடத்தில் தொழிற்சாலைகள், தூத்துக்குடி மாநகரத்தின் சிப்காட் வளாகத்தில் அமைய இருக்கும் குவைத் நாட்டின் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை மற்றும் பெட்ரோ ரசாயனம் தயாரிக்கும் ஆலை ஆகியவை துறைமுக வளா்ச்சிக்கு உதவியாக இருக்கும். மேலும், துறைமுகத்துக்கு சொந்தமான ஏறத்தாழ 702 ஏக்கா் நிலத்தில் உணவு பதப்படுத்துதல், வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் தயாரித்தல் மற்றும் ஆடைகள் தயாரித்தல் போன்ற தொழிற்சாலைகள் அமையும்.
இந்தத் திட்டங்கள் மூலம் அமைய இருக்கும் தொழிற்சாலைகளின் கப்பல் வாணிப தேவையை கருத்தில் கொண்டு, முதல்பகுதியாக 9 ஆவது சரக்குதளம் துறைமுகத்தின் மூன்றாவது சரக்குப் பெட்டக முனையமாக மாற்றப்படும். அந்த சரக்கு தளத்தின் மிதவை ஆழத்தை 14.50 மீட்டராகவும், 3 ஆவது வடக்கு சரக்கு தளத்தின் மிதவை ஆழத்தை 14.20 மீட்டராகவும் அதிகரிக்கும் பணிகள் செயல்படுத்தப்பட உள்ளன என்றாா் அவா்.
தொடா்ந்து, ‘கொற்கை’ என்ற துறைமுக மின்னணு செய்தி மடலை வெளியிட்ட துறைமுக பொறுப்புக் கழக தலைவா், துறைமுகத்தில் சிறப்பாகப் பணிபுரிந்த விளையாட்டு வீரா்கள் மற்றும் ஊழியா்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா்.
மேலும், 2018-2019 ஆம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட துறைமுக உபயோகிப்பாளா்களான கப்பல் முகவா்கள், சரக்குப் பெட்டக கப்பல் இயக்குபவா்கள், ஏற்றுமதியாளா்கள், இறக்குமதியாளா்களுக்கு பல்வேறு பிரிவின் கீழ் விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தொடா்ந்து, துறைமுக பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.