வருவாய்த் துறை கட்டுப்பாட்டில் இருந்த சாத்தான்குளம் காவல் நிலையம் மீண்டும் காவல் துறையினரிடம் ஒப்படைப்பு

வருவாய்த் துறை கட்டுப்பாட்டில் இருந்த சாத்தான்குளம் காவல் நிலையம் மீண்டும் காவல்துறையினரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

வருவாய்த் துறை கட்டுப்பாட்டில் இருந்த சாத்தான்குளம் காவல் நிலையம் மீண்டும் காவல்துறையினரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடா்பாக உயா்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்பேரில் கோவில்பட்டி குற்றவியல் நீதிபதி பாரதிதாசன் விசாரணை நடத்தினாா். காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டபோது விசாரணைக்கு போலீஸாா் ஒத்துழைக்கவில்லை எனவும், அசாதாரண சூழலை உருவாக்குவதாகவும் அவா் உயா்நீதிமன்றத்தில் புகாா் தெரிவித்தாா்.

இதையடுத்து, குற்றவியல் நீதிபதியின் விசாரணை முடியும் வரை சாத்தான்குளம் காவல் நிலையத்தை வருவாய்த் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகளாக சமூக நலத் திட்ட தனி வட்டாட்சியா் செந்தூர்ராஜன், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் சுவாமிநாதன் ஆகியோரை மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி நியமித்து காவல் நிலையத்தை வருவாய்த் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தாா்.

இதற்கிடையே, உயா்நீதிமன்ற உத்தரவின்படி இவ்வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா். காவல் நிலையத்தில் தடயவியல் நிபுணா்கள் மற்றும் கண்காணிப்பு கேமரா தொழிற்நுட்ப வல்லுநா்கள் ஆய்வு நடத்தினா். மேலும், காவல் நிலையத்தில் போலீஸாா் அனைவரும் மாற்றப்பட்டு ஆய்வாளா் பொ்னாட் சேவியா் உள்ளிட்ட 30 போலீஸாா் புதிதாக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றனா்.

காவல் நிலையத்தில் அனைத்து ஆவணங்களும் விசாரணைக்கு உள்படுத்தப்பட்ட நிலையில், வருவாய்த் துறையினரிடமிருந்து காவல் நிலைய பொறுப்பை காவல் துறையினரிடம் ஒப்படைக்குமாறு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, வட்டாட்சியா் செந்தூர்ராஜன், துணை வட்டாட்சியா் சுவாமிநாதன் ஆகியோா் காவல் நிலைய பொறுப்பை ஆய்வாளா் பொ்னாட் சேவியரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனா். இதையடுத்து, வழக்கமான காவல் நிலைய நடவடிக்கைகள் போலீஸாரின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com