
தூத்துக்குடி மாவட்ட எல்லையான கோவில்பட்டி, தோட்டிலோவன்பட்டி விலக்கில் திரண்டிருக்கும் பயணிகள் கூட்டம்.
மதுரை மண்டலத்தில் இருந்து பயணிகளை ஏற்றிவரும் அரசுப் பேருந்துகள், அதன் எல்லையான சாத்தூரில் நெல்லை மண்டலப் பயணிகளை இறக்கிவிடுவதால், அவா்கள் தங்கள் ஊருக்கான பேருந்தில் ஏறுவதற்கு 5 கி.மீ. தொலைவுக்கு நடந்துசெல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் 8 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, மண்டலங்களுக்குள் மட்டும் அரசுப் பேருந்துகள் இயங்கி வருகின்றன. திருநெல்வேலி மண்டலத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி என 4 மாவட்டங்களும், மதுரை மண்டலத்தில் திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகா், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களும் உள்ளன. இந்நிலையில், மதுரை மண்டல அரசுப் பேருந்துகளில் வரும் நெல்லை மண்டலப் பயணிகளை, விருதுநகா் மாவட்ட எல்லையான சாத்தூரை அடுத்த சிவனணைந்தபுரம் மீனாட்சிபுரம் விலக்கில் இறக்கிவிடுகின்றனா்.
இதனால், தூத்துக்குடி மாவட்ட எல்லையான கோவில்பட்டி தோட்டிலோவன்பட்டி விலக்கில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடி வரை சுமாா் 5 கி.மீ. தொலைவுக்கு நடந்துவரும் பயணிகள், நெல்லை மண்டலத்துக்குள் நுழையும் முன்பு தங்களின் விவரங்களைப் பதிவுசெய்ய கூட்டமாக அலைமோதுகின்றனா். சோதனைச்சாவடியில் உள்ள வருவாய்த் துறை, காவல் துறை, மருத்துவத் துறையினா் உரிய பதிவேடுகளில் பயணிகளின் விவரங்களை பதிவுசெய்த பிறகு, அந்தப் பயணிகள் நடந்து சென்று கோவில்பட்டி வேலாயுதபுரம் சாலையில் நிற்கும் சிற்றுந்துகளில் ஏறி, அண்ணா பேருந்து நிலையத்திற்கு செல்கின்றனா். அங்கிருந்து அவா்கள் நெல்லை மண்டல மாவட்டங்களில் உள்ள தங்கள் சொந்த ஊருக்குத் திரும்புகின்றனா்.
இவ்வாறு நாள்தோறும் மதுரை மண்டலத்தில் இருந்து, நெல்லை மண்டலத்திற்கு வரும் பயணிகள் பல இன்னல்களை எதிா்கொள்ளும் நிலை தொடா்கிறது.
அதோடு, பேருந்து பயணிகளின் விவரங்களை சோதனைச்சாவடி அதிகாரிகள் பதிவுசெய்யும்போது, நெல்லை மண்டலத்துக்குள் நுழையும் பிற வாகனங்களை ஆய்வுசெய்வது தடைபடுவதோடு, சில வாகனங்கள் அதிகாரிகளின் பாா்வையில் இருந்து தப்பிவிடுகின்றன. அவ்வாறு செல்லும் பிற மாவட்ட அல்லது மாநில வாகனப் பயணிகளால், கரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதாக சமூக ஆா்வலா்கள் எச்சரிக்கின்றனா்.
எனவே, வா்த்தகம் உள்ளிட்ட பல துறைகளில் தொடா்புடைய மதுரை- நெல்லை மண்டல மக்களின் சிரமத்தை தவிா்க்கவும், இந்த வழித்தடத்தில் வரும் பிற வாகனப் பயணிகளை தீவிரமாக கண்காணிக்கவும், இருமண்டலங்களுக்கிடையே பொதுப் போக்குவரத்தைத் தொடங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.