சாலை வசதியில்லா மாதலப்புரம் அருந்ததியர் காலனி குடியிருப்பு

புதூர் அருகே மாதலப்புரம் கிராமத்தில் அருந்ததியர் காலனி குடியிருப்புக்கு சாலை வசதி இல்லாத காரணத்தால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். 
சாலை வசதியில்லா மாதலப்புரம் அருந்ததியர் காலனி குடியிருப்பு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி புதூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது மாதலப்புரம் கிராமம். இங்கு ஊரின் கிழக்குப் பகுதியில் அருந்ததியர் இன மக்கள் 60 குடும்பங்கள் வசிக்கும் குடியிருப்புகள் உள்ளது. கடந்த நான்கு தலைமுறைகளாக மக்கள் அங்கு வசித்து வருகின்றனர். இந்நிலையில் கிராமத்தின் பிரதான தார் சாலையில் இருந்து அருந்ததியர் மக்கள் வசிக்கும் குடியிருப்புக்கு செல்ல சரியான பாதை வசதி இல்லாததால் தனியார் விவசாய நிலங்கள் வழியாக  நடைபாதை அமைத்து மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். 

மழைக் காலங்களிலும் இரவு நேரங்களிலும் இந்தப் பாதையை பயன்படுத்துவதில் பல வருடங்களாக சிக்கல் நீடித்து வருகிறது. கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், தாய்மார்கள் அவசர மருத்துவ சிகிச்சைக்காக செல்வதென்றால் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை கூட பயன்படுத்த முடியாமல் நடை பயணமாக 500 மீட்டர் தொலைவுக்கு நடந்து சென்று அதன் பிறகு வாகனங்களை பயன்படுத்த கூடிய சூழல் உள்ளது.  மழைக்காலங்களில் உயிரிழந்தவர்களின் சடலங்களை எடுத்துச் சென்று அடக்கம் செய்வதிலும் பல பிரச்சினைகள் உள்ளது. 

மாதலப்புரம் கிராமத்திலிருந்து அருந்ததியர் குடியிருப்புக்கு செல் வதற்கு ஏதுவாக தார் சாலை அமைக்க வலியுறுத்தி பலமுறை மனு அளித்தும் புதூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் அக்கறை செலுத்தவில்லை.  தற்போது நடை பாதையாக பயன்படுத்தி வரும் தனியார் நிலங்களின் உரிமையாளர்கள் தார் சாலை அமைக்க நிலத்தை தருவதற்கு முன் வந்தும் அதிகாரிகளின் மெத்தன போக்கினால் சட்டரீதியாக நிலத்தை கையகப்படுத்துவதிலும்  தார்ச்சாலை அமைப்பதிலும் இழுபறி நீடிக்கிறது. இதனால் ஒவ்வொரு நாளும் அருந்ததியினர் இன மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கிராமப்புறங்கள் வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறது என்று அரசு நிர்வாகங்கள் கூறி வந்தாலும் பல திட்டங்கள் பல பெயர்களில் அமல்படுத்தப்பட்டாலும் மாவட்டத்தின் கடைக்கோடி எல்லையில் மாதலப்புரம் போன்ற கிராமங்களில் நான்கு தலைமுறைகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் அருந்ததியர் இன மக்களின் குடியிருப்புகளுக்கு சாலை வசதி கூட அமைக்கப்படாதது அவலத்துக்கு உரியதாக தொடர்கிறது.

நாடு சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டு வைரவிழா கொண்டாட்டங்கள் நெருங்கிவரும் தருணத்தில் மாதலப்புரம் போன்ற கிராமங்களில் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்த வேண்டும் என்பதே கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com