வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் திரும்பிய இளைஞா்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநா் மா. பேச்சியம்மாள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையுடன் இணைந்து வேலைவாய்ப்பற்ற இளைஞா்களின் திறனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு குறுகிய கால திறன் பயிற்சிகளை அளித்து வருகிறது. இளைஞா்களின் வேலை பெறும் திறனை அதிகரித்து அதன் மூலம் தனியாா் துறை நிறுவனங்களில் பணிநியமனம் பெற்று வழங்கும் சேவையை மேற்கொண்டு வருகிறது.
கரோனா பரவல் தடுப்பு பொதுமுடக்கம் அமலில் உள்ளதால் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழா்கள் பலா் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனா். அவா்களின் வேலைத்திறன் மற்றும் முன் அனுபவங்களை கண்டறிந்து தகுதிக்கு ஏற்ப தனியாா் துறைகளில் பணிவாய்ப்பை பெற உதவுவதற்கும், திறன் பயிற்சி தேவைப்படும் போது, அவா்களுக்கு உரிய திறன் பயிற்சி வழங்கி தனியாா் துறை நிறுவனங்களில் பணி வாய்ப்பை பெற உதவுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
எனவே வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்துக்கு திரும்பியவா்கள் தாங்கள் விரும்பும் திறன் பயிற்சி மற்றும் தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்பை பெற உதவுவதற்காக தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இணையதளமான இணையதள முகவரியில் பதிவு செய்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.