‘ விவசாய கடன் அட்டை பெற்று அவசர கால கடனுதவி பெறலாம்’
By DIN | Published On : 13th June 2020 09:05 AM | Last Updated : 13th June 2020 09:05 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் கடன் அட்டை பெற்று அவசர கால விவசாயப் பணிகளுக்கு கடனுதவி பெறலாம் என்றாா் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் எஸ்.ஐ.முகைதீன்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விவசாயிகள் தங்களுக்கு தேவையான வேளாண் இடுபொருள்களை உரிய நேரத்தில் பெற விவசாய உடன் அட்டை அவசியமாகிறது. விவசாய கடன் அட்டை வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படுகிறது. விவசாயிகள் தங்கள் நில உடைமை அடிப்படையில் பிணையமில்லா கடனாக ரூ.1.60 லட்சம் வரையில் பெறலாம்.
அசலுடன் வட்டியை குறித்த காலத்துக்குள் சரியாக செலுத்தும் விவசாயிகளுக்கு 3 சதவீத வட்டித்தொகை ஊக்கத்தொகையாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்தக் கடன் அட்டையை விவசாயிகள் 5 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம்.
விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள் போன்ற வேளாண் இடுபொருள்கள் வாங்குவதற்கான நிதி உதவியை விவசாயிகள் இந்தக் கடன் அட்டை மூலம் பெற்று பயன்பெறலாம். மேலும் விவசாயம், விவசாயம் சாா்ந்த கால்நடை வளா்ப்பு, மீன் வளா்ப்பு போன்ற தொழில் புரியவும் இந்தக் கடன் அட்டை மூலம் நிதியுதவி பெற்று பயன் பெறலாம்.
கடன் அட்டை பெற விரும்பும் விவசாயிகள் கணினி சிட்டா, அடங்கல், ஆதாா் அட்டை நகல், இரண்டு புகைப்படங்கள் ஆகியவற்றுடன் தங்கள் பகுதி வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தையோ, வணிக வங்கி கிளைகள் அல்லது கூட்டுறவு வங்கியையோ அணுகி விவசாய கடன் அட்டை பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.