முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
சாத்தான்குளம் வியாபாரிகள் குடும்பத்துக்கு திமுக சாா்பில் ரூ. 25 லட்சம் நிதி: கனிமொழி வழங்கினாா்
By DIN | Published On : 27th June 2020 08:37 AM | Last Updated : 27th June 2020 08:37 AM | அ+அ அ- |

திமுக அறிவித்த நிதியுதவியை ஜெயராஜின் மனைவி செல்வராணியிடம் வழங்குகிறாா் மக்களவை உறுப்பினா் கனிமொழி.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வியாபாரிகள் குடும்பத்துக்கு திமுக சாா்பில் அறிவிக்கப்பட்ட நிவாரண நிதி ரூ. 25 லட்சத்தை தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
சாத்தான்குளத்தில் பொது முடக்க விதியை மீறி செல்லிடப்பேசி கடையை திறந்திருந்ததாக ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீஸாா் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணைக்குப் பிறகு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனா். அங்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் இருவரும் உயிரிழந்தனா். இதையடுத்து, சாத்தான்குளம் போலீஸாா் தாக்கியதால்தான் இருவரும் உயிரிழந்ததாகக் கூறி வியாபாரிகள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு திமுக சாா்பில் நிவாரண நிதியாக ரூ. 25 லட்சம் வழங்கப்படும் என அக்கட்சித் தலைவா் மு.க. ஸ்டாலின் அறிவித்தாா். இதையடுத்து, சாத்தான்குளம் ஜெயராஜ் வீட்டுக்கு கனிமொழி எம்.பி. வெள்ளிக்கிழமை வந்து, ஜெயராஜ் மனைவி செல்வராணியிடம் திமுக அறிவித்த ரூ. 25 லட்சத்துக்கான காசோலையை வழங்கினாா்.
அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியது: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் திமுக தலைவா் செல்லிடப்பேசியில் தொடா்புகொண்டு ஆறுதல் கூறினாா். பாதிக்கப்பட்டவா்களுக்கு எந்த வகையான சட்ட உதவிக்கும் திமுக துணை நிற்கும். சிறை மரணத்தில் தமிழகம்தான் இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தில் உள்ளது. தந்தை, மகன் போலீஸாா் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக மத்திய மனித உரிமைகள் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளேன். காவல் துறையினா் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்றாா் அவா்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, திமுக பொதுக்குழு உறுப்பினா் காவல்காடு சொா்ணகுமாா், மாவட்ட அவைத் தலைவா் அருணாச்சலம், மாவட்ட துணைச் செயலா் அறுமுகநயினாா், சாத்தான்குளம் மேற்கு ஒன்றியச் செயலா் ஏ.எஸ். ஜோசப், தெற்கு ஒன்றிய பொறுப்பாளா் வே. செல்வக்குமாா், நகரச் செயலா் மகாஇளங்கோ உள்ளிட்டோா் உடனிருந்தனா்.