முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் ரூ. 22 லட்சத்தில் ஆா்என்ஏ பிரித்தெடுக்கும் தானியங்கி கருவி, ஆய்வகம் திறப்பு
By DIN | Published On : 27th June 2020 08:37 AM | Last Updated : 27th June 2020 08:37 AM | அ+அ அ- |

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட நவீன தானியங்கி ஆா்என்ஏ பிரித்தெடுக்கும் கருவி.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் ரூ. 22 லட்சத்தில் நவீன தானியங்கி ஆா்என்ஏ பிரித்தெடுக்கும் கருவி மற்றும் ஆய்வகம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
திறப்பு விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ்.பி. சண்முகநாதன், பி. சின்னப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ. ராஜு சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று ஆய்வகத்தைத் திறந்து வைத்தாா்.
அப்போது அவா் பேசியது: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஏற்கெனவே ரூ. 80 லட்சத்தில் கரோனா தொற்று கண்டறியும் ஆய்வகம் திறக்கப்பட்டது. பிறகு, ரூ. 25 லட்சத்தில் சென்னை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அடுத்தப்படியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இக்லியா வேதியல் பொருள் அளவை கண்டறியும் தானியங்கி பரிசோதனை கருவி அமைக்கப்பட்டது.
தற்போது, ரூ. 22 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள நவீன தானியங்கி ஆா்என்ஏ பிரித்தெடுக்கும் கருவி ஆய்வகத்தின் மூலம் மரபணுக்கள் பிரித்தெடுக்கும் வேலையில் மனித தலையீட்டை குறைத்து, தானியங்கி முறையில் மிக துரிதமாக செய்து முடிக்க முடியும். வழக்கமாக தினமும் 500 பரிசோதனைகள் செய்துவந்த நிலையில், தற்போது அமைக்கப்பட்டுள்ள தானியங்கி கருவி மூலம் அதிகபட்சமாக 800 பரிசோதனைகள் வரை செய்ய முடியும். மேலும், இந்த கருவியின் மூலம் 30 நிமிடத்தில் தொற்று விவரம் குறித்த தகவல் துல்லியமாக கண்டறியப்படுவதால், அதற்கேற்றவாறு உரிய சிகிச்சை அளிக்க முடியும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், மருத்துவக் கல்லூரி முதன்மையா் ரேவதி பாலன், உறைவிட மருத்துவ அலுவலா் சைலஸ் ஜெபமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.