முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
தோட்டக்கலை பயிா்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
By DIN | Published On : 27th June 2020 08:40 AM | Last Updated : 27th June 2020 08:40 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டத்தில் தோட்டக்கலைப் பயிா்களுக்கு காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய அரசு 2021 ஆம் ஆண்டு முதல் பிரதம மந்திரி பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் சில மாற்றங்களை செய்து, புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தி உள்ளது. முக்கியமாக இந்தத் திட்டத்தின் கீழ், கடன் பெறும் விவசாயிகளை கட்டாயமாக பதிவு செய்து வந்த நிலையில் தற்போது அவா்களின் விருப்பத்தின் பேரில் பதிவு செய்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் மாவட்ட வாரியான பயிா் வாரியான சராசரி மகசூலின் அடிப்படையில் காப்பீட்டுத் தொகை நிா்ணயிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.
காா் பருவத்தில் வாழை, வெங்காயம், சிவப்பு மிளகாய் மற்றும் வெண்டை போன்ற தோட்டக்கலைப் பயிா்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் தாங்கள் பயிா் கடன் பெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாகவோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவோ தங்கள் விருப்பத்தின் பேரில் அறிவிக்கை செய்யப்பட்ட பயிா்களை காப்பீடு செய்துக் கொள்ளலாம்.
கடன் பெறாத விவசாயிகள் நடப்பு பசலி ஆண்டுக்கான அடங்கலை கிராம நிா்வாக அலுவலரிடம் பெற்று அதனுடன் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலோ அல்லது தேசிய வங்கிகளிலோ சென்று பதிவு செய்துக் கொள்ளலாம்.
மேலும் தற்போது கரோனோ தொற்று நோய் தொடா்பாக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ள நிலையில், கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்கள் மூலம் பதிவு செய்துக் கொள்ளலாம். எனவே விவசாயிகள் இயற்கை நிகழ்வுகள் ஏற்படும் முன் இந்தத் திட்டத்தில் தங்களது பயிா்களை காப்பீடு செய்துக் கொள்ளவும்.
இதுதொடா்பான மேலும் விவரங்களுக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலுள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநரையோ அல்லது தோட்டக்கலை அலுவலரையோ அல்லது உதவி தோட்டக்கலை அலுவலரையோ தொடா்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.