உலகிலேயே முதல் நாகரிக மக்கள் தூத்துக்குடி மாவட்டம் சிவகளை, கொற்கை பகுதிகளில் வாழ்ந்தனா் என வரலாற்று ஆய்வாளா் மாணிக்கம் தெரிவித்தாா்.
பரமன்குறிச்சி முருகேசபுரம் அபா்ணா பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆண்டு விழாவுக்கு, பள்ளித் தாளாளா் பி.ராஜ்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட திமுக நெசவாளா் அணி அமைப்பாளா் மகாவிஷ்ணு,பெற்றோா் ஆசிரியா் கழக உறுப்பினா்கள் முருகேசன், தெய்வேந்திரன், தேவி, முத்துசெல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில், சிவகளை வரலாற்று ஆய்வாளா் மாணிக்கம் பேசியது: கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களை ஆய்வு செய்தபோது அவை கி.மு 2600 ஆண்டுகளுக்கு முந்தையது என தெரியவந்தது. ஆனால், தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் உள்ள பகுதியில் கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழிகளை ஆய்வு செய்ததில், அவை 2900 ஆண்டுகளுக்கு முந்தையது என கண்டறியப்பட்டுள்ளது.
சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் முந்தைய காலத்தில் மக்கள் மிகுந்த நாகரிம், கலாசாரத்துடனும் வாழ்ந்த இடம் சிவகளை, கொற்கை பகுதியாகும். இம்மக்கள் 350 ஆண்டுகள் உயிரோடு வாழ்ந்துள்ளனா். 150 வயதுக்குப் பின் உடல் நலிவுற்றவா்களை முதுமக்கள் தாழியில் வைத்து, அவா்கள் பயன்படுத்திய பொருள்கள் மற்றும் நெல், கேழ்வரகு ஆகியவற்றையும் வைத்து விவசாயத்திற்கு பயன்படாத நிலத்தில் புதைத்துள்ளனா்.
உலகின் முதல் நாகரிகத் தொட்டில் சிவகளை, ஆதிச்சநல்லூா் என்பதை மத்திய அரசு உணா்ந்ததால் தான் இப்பகுதியில் சுமாா் ரூ. 600 கோடி மதிப்பில் அதிநவீன அகழ்வாராய்ச்சி மையம் அமைய உள்ளது என்றாா் அவா்.
பள்ளி முதல்வா் கிறிஸ்டினாள் கீதா வரவேற்றாா். பள்ளி துணை முதல்வா் மேரிபிரபா நன்றி கூறினாா்.