சாலை விபத்தில் கையை இழந்த தொழிலாளிக்கு ரூ. 22 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு
By DIN | Published On : 02nd March 2020 11:23 PM | Last Updated : 02nd March 2020 11:23 PM | அ+அ அ- |

தூத்துக்குடி அருகே விபத்தில் சிக்கி கையை இழந்த தொழிலாளிக்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் ரூ. 22 லட்சம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம், தென்திருப்பேரை அழகுமுத்தாரம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முத்து (35). கூலித் தொழிலாளியான இவா் கடந்த 11.4.2015-இல் தூத்துக்குடியில் இருந்து தென்திருப்பேரைக்கு அரசுப் பேருந்தில் சென்று கொண்டிருந்தாா். முக்காணி அருகே சென்ற போது, திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற அரசுப் பேருந்துடன் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த முத்துவின் கை துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, முத்து தனக்கு ரூ.40 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். ஹேமா பாதிக்கப்பட்ட முத்துக்கு மதுரை மற்றும் திருநெல்வேலி அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் ரூ. 22 லட்சத்து 52 ஆயிரம் இழப்பீடு, 7.5 சதவீதம் வட்டி மற்றும் செலவுத் தொகை ஆகியவற்றை வழங்க வேண்டும் என திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.